சுக்ரதசை அடிக்குதப்பா!

சுக்ரதசை அடிக்குதப்பா!
Published on

“அவனுக்கென்னப்பா, சுக்ரதசைதான்...” என்பார்கள். சுக்ரன் என்றால் வளமை வசதி என்று அர்த்தமாகி விடுகிறது. மனிதர்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கையை தருபவனாகத்தான் சுக்ரன் வர்ணிக்கப் படுகிறான்.

மனிதர்களுக்கு வளமையைக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய க்ஷேத்திரம் வளமையில்லாமல், நவக்கிரகக் கோயில்களிலேயே மிகவும் கவனிக்கப்படாமல் இருப்பது, பராமரிப்பு இல்லாமல் இருப்பது இந்த கஞ்சனூர் சூரியனார்க் கோயில்தான் எனலாம்.

சுக்ரனுக்கென தனிச் சன்னிதி இங்கு இல்லை. எனினும் நவக்கிரங்களிலே தங்கள் குறைகள் தீர இறைவனை வேண்டி வரம் பெற்றவை. இந்த நவக்கிரகத் தலங்களும், அந்தந்தக் கோயில்களில் குடிகொண்டிருக்கும் மூலவர் அந்தந்த நவக்கிரக நாயகரின் பிணி தீர்த்ததும் இல்லாமல், “உன்னால் இந்த ஸ்தலம் மகிமைபெற்றது. எனவே உன்னால் தோஷமடையும் மனிதர்கள் இங்கு வந்து பிரார்த்திக்கும்போது அவரவர் கர்மபலன்களைக் களையும் சக்தி உனக்கு உண்டாகட்டும்” என வரமருளியதாலேயே இந்த க்ஷேத்திரங்கள் பவித்திரம் பெற்றன. கும்பகோணம், மாயவரம் சுற்றியுள்ள இந்த ஒன்பது க்ஷேத்திரங்களுமே ‘பரிகார க்ஷேத்திரங்கள்’தான். இங்கெல்லாம் நவக்கிரக நாயகர்கள் ஆள், படை, அம்பு என ஆயுதங்களோடு இருப்பதில்லை. அருள் வழங்கும் மூர்த்திகளாகவே விளங்குகின்றனர்.

ஆலங்குடியில் மேகா தட்சிணாமூர்த்தியே குருவாக அமர்ந்து அருள்பாலிப்பது போல, கஞ்சனூரில் மூலவர் அக்னீஸ்வரரே சுக்ரன் வடிவில் அருள்பாலிக்கிறார். இவரைத் தொழுது அர்ச்சித்தாலே ‘சுக்ரதோஷம்’ நீங்கி நலம் பெறலாம் என்கிறார்கள்.

இங்கு பெரியோர்கள் சொல்லும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. நம்மிடம் சுமக்க முடியாமல் ஒரு லட்ச ரூபாய்க்குச் சில்லறை காசுகளாக இருக்கிறது. இதைச் சுமந்துகொண்டு இறைவனிடம் போகிறோம். அவர் அதை நோட்டுகளாக மாற்றி எளிதாக தூக்கிச் செல்ல வைக்கிறார். பணம் என்னவோ அங்கே அளவுதான். முன்பு சுமக்க முடியவில்லை. இறைவன் அருளால் பிறகு எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது.

அதேபோலத்தான் நம் கர்மபலன்களும். அந்தப் பரமனே காலத்தின் நியதிகளுக்கு உட்பட்டுப் பல சோதனைகளைச் சந்தித்தான் என நம்புராணங்கள் கூறுகின்றன. அந்த அகிலனும், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியுமே விதிக்கு உட்பட்டு நடக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் இறைவனின் கருணாகடாட்சம் அதே கர்மபலனை நம்மை எளிதில் சமாளிக்க வைக்கிறது.

இப்படித்தான் பரிகாரஸ்தல்கள் விளங்குகின்றன. கர்மாவினால் அவதிப்படும் மனிதர்கள் முழு நம்பிக்கையோடு தொழுது வணங்கும்போது மனம் உறுதி பெறுகிறது. ஆற்றல் அதிகரிக்கிறது. எளிதாகப் பிரச்னைகளை எதிர்கொண்டு கடந்தும் சென்று விடுகிறோம்.

சுக்ரனைப் ப்ரீதி செய்வது எப்படி?

சுக்ரன் வெண்மை வடிவினன். வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம் வைரக்கல் வெண் தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி, அத்திச் சமித்தினால் யாகம் செய்து, மொச்சைப் பொடியன்னம், தயிரன்னம் இவற்றால் ஆகுதி பண்ணி தீபாராதனை செய்து தொழ வேண்டும் என்கிறார்கள்.

சுக்ராச்சார்யார் அசுரர்களின் குரு. மகாவிஷ்ணு மகாபலி சகர்வர்த்தியிடம் மூணடி மண் கேட்டபோது, நடைபெற இருக்கும் விபரீதத்தை அறிந்துகொண்டு மகாபலியைத் தானம் தர மறுக்கச் சொன்னார். மகாபலி பிடிவாதமாக இருக்கவும், கெண்டியில் தானத்திற்கு நீர் வார்க்கும்போது வண்டாக செம்பினுள் இருந்து அடைத்துக்கொண்டார். மகாவிஷ்ணு பவித்திரத்தால் கெண்டியின் வழியினுள் குத்த அங்கு வண்டு வடிவாக இருந்த சுக்ராச்சார்யார் ஒரு கண்ணினை இழந்தார் என்பார்கள்.

சுக்ரன் மகா தபஸ்வி. கடும் தவம் இருந்து ஈஸ்வரனிடம் உபதேசம் பெற்றவர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரமருளும் பராக்ரமம் பெற்றவர் என்பார்கள். பிருகுவின் குமாரரான சுக்ரனை வழிபடுவதற்கென்று சில விசேஷ வழிமுறைகள் உண்டு. அதனை அறிந்தவரைக் கொண்டு வழிபடும்போது மிகச் சிறந்த பலன்கள் உண்டாகும் என்கிறார்கள்.

சுக்ரன் இன்பத்திற்குரியவன். ஜாதகத்தில் களத்திரகாரகனாக இருப்பதால் இவனது சுயபலத்தைக் கொண்டே வாழ்க்கைத் துணைவி சுகபோகம் முதலிய அம்சங்கள்  நிர்ணயிக்கப்படுகின்றன. ‘மிருதசஞ்சீவினி’ மந்திரத்தால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் மகா தபஸ்வியாக விளங்குவதால் வேண்டுவோர்க்கு வரமருளும் பராக்ரமம் உடையவன் ஆகிறான்.

கஞ்சனூரைப் பரிகாரக்ஷேத்திரமாக் கொண்டு மூலவரை ஆராதித்துப் பரிகாரம் பெறலாம். அதேபோல விண்ணளந்த பெருமாள், பள்ளிகொண்ட பெருமாளாக உறையும் ஸ்ரீரங்கமும் சுக்ரனுக்குரிய க்ஷேத்திரமே. இங்கும் சுக்ரனுக்கென்று முக்கிய சன்னிதி இல்லையெனினும், ‘சுக்ரப்பரீதி’யை இங்கும் செய்யலாம். ‘அஞ்சேல்’ என அபயக்கரம் காட்டி ‘என் அடி தொழுவார்க்கு இகபர சுகங்கள் உண்டு’ என மந்தகாசப் புன்னகையுடன் பள்ளிகொண்ட பெருமாளின் க்ஷேத்திரமும் சுக்ரனுக்கரிய க்ஷேத்திரமாகவே கருதப்படுகிறது.

சுக்ரனைப் பற்றி அனைத்து குணங்களையும் ஒரு பாடல் அழகாகச் சொல்லுகிறது.

“மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்

காக்க வான்மழை பெய்விக்கும் கவிமகன் குனகம் ஈவோன்

தீர்க்க வானவர்கள் போற்ற, செத்தவர்தமை எழுப்பும்

பார்க்கவன் சுக்ராச்சாரி பாதபங்கயமே போற்றி.”

நாமும் அவ்வண்ணமே போற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com