சுக்ரீவன் பிரதிஷ்டை செய்த சுக்ரீஸ்வரர் ஆலயம்!

சுக்ரீவன் பிரதிஷ்டை செய்த சுக்ரீஸ்வரர் ஆலயம்!
Published on

திருப்பூர் மாவட்டம், சர்க்கார் பெரியபாளையம் என்ற இடத்தில் உள்ளது சுக்ரீஸ்வரர் திருக்கோயில். ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

இந்த ஆலயம் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். எனவே, இந்தத் தலம் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், ’குரக்குத்தளி ஆடுடைய நாயனார்’ என்றும் அழைக்கப்படுகிறார். கருவறைக்கு வலதுபுறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்பாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எந்த சிவன் கோயில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. ஆலய சுற்றுப் பிராகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

இந்தக் கோயிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். சிவனுக்குப் பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி, இந்த ஆலயத்தின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். மிளகுக்கு இருந்த விலை மதிப்பு காரணமாக, வியாபாரி பாசிப்பயிறு இருப்பதாக பொய் உரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளது. ஆலயத்தின் முன்பு பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, அந்த வியாபாரி கதறி அழுதார். இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு. உன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.

வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்துடன் கடந்த 14 வருடங்களாக அஷ்டமி தேய்பிறையில் கால பைரவர் பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்தக் கோயிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோயில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது சிவபெருமான் வாகனமான நந்தியே என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.

தனது தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

அமைவிடம்: திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com