அனைத்தையும் மகாகாளியிடம் ஒப்படைத்து விடு!

மகா காளி...
மகா காளி...

-ம. வசந்தி திண்டிவனம்

கோடானுகோடி கற்பகங்கள் கொண்ட காலத்தையே தன்னகத்தே அடக்குபவளாகவும் உயிர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் காலனை ஓடச் செய்வதாலும் 'காலீ'' என அழைக்கப்படுகிறாள். வடமொழியில் 'காலி 'என்றும்' காலிகா' என்றும் அழைக்கப்பட்டு தென் மொழியில் 'காளி 'என வழங்கப்படுகிறது.

இவள் காளகண்டனான சிவபெருமானுக்கு பத்தினியாதலால் 'காளகண்டி 'எனவும் ஆடையின்றி இருப்பதால் 'திகம்பரி' எனவும் காலனுக்கே காலனாக இருப்பதால் 'காலஹந்த்ரி' எனவும், எங்கும் நிறைந்திருப்பதால் மகா காளி எனவும் போற்றப்படுகிறாள். எப்பேர்ப்பட்ட பாவங்களை செய்தவனும் இந்த காளி தேவியை பூஜிப்பதாலும் இவளது மந்திர உச்சரிப்பினாலும் நற்கதியை அடையலாம் என்று மோகினி தந்த்ரம் கூறுகிறது.

அன்னையின் பத்து அவதாரங்களான காளி, தாராதேவி, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, சின்ன மஸ்தா, பகளா முகி, தூமாவதி, இராஜமாதங்கி, கமலாத்மிகா ஆகிய 10 பேரும் தசமகா வித்யா தேவிகாளாவர். இந்த பத்து ரூபங்களில் முதன்முதல் தோன்றிய ரூபம் காளி.  

காளி என்ற உடனேயே கோபாவேசத்தோடு கூடிய முகம், தொங்கும் சிவப்பான நாக்கு, கலைந்து விரிந்த நெடுங்கூந்தல், ஆடையில்லாத கரிய நிற மேனி, கழுத்தில் தொங்கும் கபால மாலை, ரத்தம் உளராத வாள், கையில் வெட்டுண்ட தலை, இடுப்பில் வெட்டுண்ட கைகள் கூடிய தோற்றமே நம் கண் முன்னே நிற்கும். அது மட்டுமல்லாமல் காளி என்றாலே பில்லி, சூனிய, தெய்வம் என்ற எண்ணமும் காளியை வழிபடுபவர்களை கண்டால் பயமும் தோன்றும். ஆனால் உண்மையில் அன்னை காளி ஒரு கருணை கடல்  கோர ரூபமாக அவள் தோற்றம் கொண்டாலும் அவளே ஆனந்த ரூபிணியாகவும் விளங்குகிறாள். அருளும் ஆவேசமும் ஒன்று கலந்த மகா சக்தியே அன்னை காளி. அன்னை மகாகாளியை பூஜிப்பதால்  நம்மை நாடிவரும் தீய வினைகளும் பகையும் அழியும். இகபர சுகங்களோடு மோட்சப் பிராப்தியும் கிடைக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு நீலமேக சியாமளனாக இருக்கிறாரோ, அதைப்போல, அவருடைய சகோதரியான அன்னை காளி தேவியும் இருக்கிறாள். இவள் எங்கும் நிறைந்தவளாதளால் நீல நிறம். எல்லையற்ற பொருளுக்கு உரியது நீல நிறம். வானம் கடல் போன்ற எல்லையற்றவை நீல நிறமாக இருப்பதை நாம் காண்கிறோம். அதைப்போல் அன்னை பரந்து விரிந்த இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால் அன்னை மகாகாளியும் நீல நிறத்தவளாகவே இருக்கிறாள் .இவளே பத்திரகாளியாக கருப்பாகவும், பார்வதியாக மஞ்சள் நிறம் உள்ளவளாகவும் விளங்குகிறாள். நெருப்பு ஜ்வாலையாகவும் பிரளயத்தின் போது தோன்றும் காளராத்திரியாகவும் விளங்குகிறாள்.

அன்னை மகா காளியே ஆக்கல் தொழிலையும், அழித்தல் தொழிலையும் செய்கிறாள். அழித்தல் தொழிலை மேற்கொள்வதினால் இவள் 'சம்ஹார ரூபிணி' எனப்படுகிறாள். காளி தேவியை வணங்க விரும்புபவன் வீரனாக இருக்க வேண்டும். கோழைகளுக்கு அவள் தன் இயல்பை காட்ட மாட்டாள். அவள் தினம்தோறும் சம்ஹாரத் தொழிலையே செய்து வருகிறாள். அவளது நீண்ட நாக்கு இதை உணர்த்துகிறது .இவள் தாண்டவம் ஆடும் இடம் சுடுகாடு. மனிதன் தன் மனத்தை சுடுகாடாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது காமம், வெகுளி, பொறாமை, ஆசை முதலியவற்றை எரித்து பஸ்பம் ஆக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட நிர்மலமான மனதில்தான் அன்னை தோன்றுவாள். 

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
மகா காளி...

பயங்கரமான உருவங்களை அதாவது பயங்கர கோர வடிவம் கொண்ட தெய்வ வடிவங்களை நாம் வழிபட வேண்டும் என்று விவேகானந்தர் கூறுகிறார். காளி வழிபாட்டை வீர வழிபாடு என்று குறித்தனர் முன்னோர். சத்ருபயம் நீங்கவும், எம பயமின்றி இருக்கவும் காளி வழிபாடு மிகச்சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. இக்கலியுகத்தின் கொடுமைகளை நீக்க காளிதேவியின் வழிபாடு பேருதவி செய்யும். அக்காலத்தில் அசுரர்கள், தேவர்கள் மனிதர்கள் என்று தனித்தனியே அடையாளம் கண்டு அதற்கேற்றார்போல் மனிதன் வாழ்ந்திட வழி இருந்தது. ஆனால் இக்காலத்தில் இம்மூவகையினரும் மனித வடிவில்தான் உலகில் நடமாடுகின்றனர்.

அவர்களை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. அதனால் தான் எல்லாம் வல்ல மகா காளியை சரணடைந்தால் மற்ற எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வாள். தீமையை அழித்து நல்லவர்களை காப்பதே அவளின் அருள் செயலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com