
கீழப்பெருமழையின் காவல் தெய்வமான ஐயனார், எளிமையானவர்; நேர்மையானவர்; ஊருக்குப் பாதுகாப்பு அளிப்பவர்! ஊரை விட்டு இரண்டு கிலோ மீட்டர் தாண்டி, மரைக்காக் கோரையாற்றுக் கரையில் இருப்பவர்! ஆற்றையும் அதனையொட்டிய ஓடையையும் தாண்டி, சிறு மைதானத்தில் சில மரங்களுடன் தன் எளிமையை மேற்கொள்பவர்! தன்னை நம்பி வருபவர்களையும், நேர்மையாளர்களையும் கேட்காமலே உதவி, காப்பாற்றுபவர்! மழை நேரங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் நேரங்களில் அங்கிருப்பவர்களை ‘அலர்ட்’ செய்து ஊரைக் காக்க உதவுபவர்!
அவர் கோயில் என்றழைக்கப்படும் மைதானத்தைச் சுற்றித்தான் ரெத்தினசாமித் தேவரின் வயல்கள். அவர் ஒன்றும் பெரும் பண்ணையார் அல்ல. சுமார் ஆறு மா நிலந்தான்! அதனைக் கொண்டுதான் தன் பெரிய குடும்பத்தை நேர்மையாகக் காப்பாற்றி வருகிறார்! உணவுக்கு அந்த வயலில் விளையும் நெல்லைச் சேமித்து விடுவார். மேற்செலவுக்கு மில்களில் கணக்கெழுதி மாதச் சம்பளத்தைப் பெற்றுக் காலத்தை ஓட்டுவார்.