
ஓம் ஓம் என்று கோவில் மணி அடிக்க, ஒரு சிலிர்ப்புடன் எழுந்தார் ரத்தினம். காபியின் நறுமணம் சமையல் அறையில் இருந்து மெதுவாக தவழ்ந்து வந்து அவர் நாசியைச் செல்லமாகச் சீண்டியது. மங்களம் எது செய்தாலும் வாசனை ‘கும்’ என்று வீடு முழுவதும் ஆக்கிரமிக்கும்.
‘பாவம், அவளுக்கு; என்ன செய்திருக்கிறேன் நான்?‘ என்று எண்ணிக்கொண்டே கிணற்றடிக்கு போனார், பத்தே நிமிடங்களில் தயாராகிய மங்களத்தின் முகத்தை அன்போடு பார்த்தபடி காப்பியை ரசித்துக் குடித்தார்.
“நீ குடிச்சியாமா?” என்று கேட்க, ‘ம்’ என்று ஒரு சிரிப்பும், சின்ன தலை அசைப்பும்.
‘முருகா இவளுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தபடி நாதஸ்வரத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு நடந்தார் ரத்தினம்.
தினமும் இறைவனுக்காக வாசிப்பதுதான். ஆனால் இன்று ஒரு தீர்மானத்தோடு இருந்தார் ரத்தினம். முருகனிடம் மன்றாடிக் கேட்டு விடுவதுதான் ஒரே வழி. எதிர்காலத்தை எப்படி சமாளிப்பது? தான் போய்விட்டால் கொஞ்சமாவது பணம் வேண்டுமே மங்களத்திற்கு? என்ன செய்வாள் அவள், பாவம்? பிள்ளை குட்டி என்று ஒன்றும் கிடையாது.