

சாம்பசிவக் குருக்களும் ஜானகிராமனும் பள்ளிக்காலம் முதல் நல்ல சினேகிதர்கள். அப்போது அவன் வெறும் ஜி. சாம்பசிவன்தான். பத்தாம் வகுப்புப் படிக்கிறபோதே அவனுடைய அப்பா கணேசன், அவனையும் தன்னுடைய வாரிசாக அம்பாள் கோவிலில் குருக்கள் வேலைக்குப் பழக்கிவிட்டார்.
கோவில் ஒன்றும் அதிகம் பழைமையானதில்லை; பெரிய அளவிலான கோவிலும் இல்லை. முன்னால் இடப்புறத்தில் ஒரு பிள்ளையார். அம்பாள் எதிரே ஒரு யாளியோ, சிங்க வடிவமோ இருக்கும். இடப்புறத்தில் எளிமையான, ஆனால் அழகான சிறு மண்டபம். அவ்வளவுதான் கோவில். விசாலமான வளாகம். அன்றாட பூஜைக்குத் தேவையான மலர்களைத் தரும் சில செடிகொடிகள். முறையாக கவனிக்கத்தான் ஆளில்லை.
சக்திவாய்ந்த தேவதை என்பதாக அம்பாள் பெயர் வாங்கியிருந்தாள். கோவில் ஒரு முன்னூறு ஆண்டுகள் முன்னால் எடுப்பிக்கப்பட்டிருக்கலாம். உட்கார்ந்த நிலையில் அந்த அம்மன். நாலு கை, எட்டுக்கை எல்லாம் இல்லை. இரண்டே கரங்கள்தான்.
அம்பாள் கருவறைக்கு உள்ளேதான் போகமுடியாதே தவிர, முன்மண்டபம் வரை யாரும் சென்று வழிபடலாம். சாதித் தடையெல்லாம் அறிந்திராத சின்ன ஊர்.