
சிவதாசனைப் பொறுத்தவரை எந்த விளைச்சல் ஆனாலும் அதில் முத்தானதென்று அவர் கருதுவதை அவ்வூர் அகிலாண்டேஸ்வரி சமேத ஆத்மநாத சுவாமி கோயிலுக்குக் காணிக்கையாக்கி விடுவார்! நெல்லோ…கரும்போ… வாழையோ… பிறவோ! முதல் அறுவடையில் நல்லது சிவனுக்குத்தான்! கோயிலுக்கு அவ்வாறு வழங்குவதைத் தன் சிறு வயதிலிருந்தே கொள்கை முடிவாக்கிக் கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்றியும் வருகிறார்!
அதற்குத் தகுந்தாற்போல் இறைவனும் அவர் விளைச்சலுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டார்! அவர் வயலில் மட்டும் விளைச்சல் பொய்க்காமல் இருப்பதற்குக் காரணம் இறைவனின் கருணை என்று ஒரு சாராரும், இல்லையில்லை அவர் கடின உழைப்பே காரணமென்று மறு சாராரும் பட்டிமன்றமே நடத்துமளவுக்குப் பேசுவார்கள்! ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரோ பட்டத்தே பயிர் செய்வதையும், பாடுபட்டு உழைப்பதையும் தன் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார்!