

ஒருமுறை துர்வாசமுனிவர் கேகய நாட்டின் அமைதியான சூழல் பிடித்துப் போய் அங்கேயே தவம் செய்ய முடிவு செய்தார். தவசீலரான துர்வாசரின் வருகையை அறிந்த கேகய அரசன் அசுவபதி, ஓடோடி வந்து துர்வாசரின் பாதங்களை வணங்கினான். பிறகு அவரை தன் அரண்மனையை ஒட்டிய வனத்திலேயே தவம் மேற்கொள்ளலாம் என்றும், அவர் மகள் கைகேயி உடன் இருந்து கவனித்துக் கொள்வாள் என்றும் கூறினான்.
அருகில் நின்ற கைகேயியை அசுவபதி அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். துர்வாச முனிவரும் சிறுமியை ஆசீர்வதித்து அங்கேயே யோக நிஷ்டையில் ஆழ்ந்து போனார். நாட்கள், மாதங்கள், வருடங்கள் என வெகு காலம் தவம் நீடித்தது. ஆடாமல் அசையாமல் கற்சிலையாக அமர்ந்திருக்கும் துர்வாசரைக் கண்டு சிறுமி கைகேயிக்கு ஆச்சர்யம். நாளடைவில் அது சந்தேகமாக உருவானது. இவர் உயிரோடுதான் இருக்கிறாரா என்று அறிய அவருடைய நாசி துவாரத்தில் குச்சியை நுழைத்தால், முனிவரிடம் மாற்றம் நேரிடலாம் என்று முடிவு செய்தாள்.