

மகாபாரதத்தில் கௌரவர்கள் ஆன 100 பேர்களில் ஒருவன் விகர்ணன். பத்து பேர்கள் கூடியிருக்கும் சபையில் அவர்கள் கருத்துக்கு மாறாக ஒரு கருத்து சொல்வதென்றால் அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் தீயோர்கள் நிறைந்த சபையில் ஆபாச வெறியாட்டம் ஆடும் போது அங்கிருந்த அறிவிலும், ஞானத்திலும், வயதில் மூத்தவர்கள் கூட வாய்மூடி மௌனிகளாய் இருந்த போது, அனைவரையும் விட சிறியவனாக இருந்த விகர்ணன் சபையில் நடக்கும் முறையற்ற நடத்தையை தடுக்க முயன்றான்.
பாண்டவர்கள் சூதாட்டத்தில் அனைவரையும் பணயம் வைத்த பிறகு த்ரௌபதியையும் ஆட்டத்தில் இழந்தனர். துயரத்தில் த்ரௌபதி சபையினை நோக்கி பலவிதமான தர்மங்களை எடுத்துக் கூறி நீதி கேட்டாள். ஆனால் யாருமே வாய் திறக்கவில்லை. அந்த நேரத்தில் விகர்ணன் எழுந்தான் "அன்பர்களே சபையில் இவ்வளவு பேர்கள் இருந்தும் திரௌபதியின் கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்லுங்கள். பதில் சொல்லாவிட்டால் நம் அனைவர்க்கும் நரகம்தான் கிடைக்கும்" என்றான். பீஷ்மர், துரோணர், விதுரர், திருதராஷ்ட்ரன், கிருபர் ஆகியோர் கூட வாயை திறக்கவில்லை.