

ஊன்றுகோல் உதவியுடன் பல மைல்கள் தூரம் கடந்து வந்து, குலோத்துங்க சோழன் அரண்மனை வாயிலை வந்தடைந்தார் ஔவையார். காவலனிடம், பெண்பாற் புலவர் ஔவையார் வந்திருப்பதாக, மன்னரிடம் தகவல் சொல்ல சொல்லி காத்திருந்தார்.
ஔவையார் வருகை விவரத்தைச் சொல்ல உள்ள போன காவலன் திரும்பி வரவில்லை. காலம் கடந்து கொண்டிருந்தது. கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள். காவலன் வந்தபாடில்லை. பயணக் களைப்பு அவளைப் படுத்தியது.
வெகு நேரத்திற்கு பிறகு காவலன் வந்தான். அவன் கையில் புத்தம்புதிய நூற்சேலை ஒன்றிருந்தது. அந்த நூல் சேலையை காண்பித்து, “தாயே! தாங்கள் வந்திருப்பதாக மன்னரிடம் தகவல் கூறி, தங்களை உள்ளே வர அனுமதிப்பது குறித்து ஆணை கேட்டேன், அதற்கு மன்னர், தற்போது அத்தியாவசிய பணிகளுக்காக, மந்திரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆதலால் சந்திக்க இயலாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு, இந்த நூல் சேலையை பரிசாக உங்களிடம் வழங்க ஆணையிட்டுள்ளார். அதை வாங்கி கொள்ளுங்கள் தாயே!" என்றான் காவலன்.