

சீதையைத் தொலைத்துவிட்டு ஜடாயு சொன்ன திசையினை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர் ராமரும் லட்சுமணரும். கிஷ்கிந்தை காட்டில் பழங்களைத் தின்றுகொண்டிருந்த அனுமன் அவர்களைக் கண்டுவிட்டார். வில்லேந்திய வீரர்களைக் குரங்கு கூட்டத்தை வேட்டையாட வந்தவர்கள் என்று நினைத்து மரத்தின்மீது மேலும் உயரத்தில் ஏறிப் பதுங்கிக்கொண்டார்.
ஒருவர் (ராமர்) தூரத்தில் எதையோ பார்த்துக்கொண்டும் மற்றவர் (லட்சுமணன்) கீழே தரையில் எதையோ தேடிக்கொண்டும் வந்தனர். தொலைத்த எதையோ தேடிக்கொண்டு வருகிறார்கள், வேட்டையாடுவது அவர்களது நோக்கமல்ல என்று அனுமன் யூகித்தார். உறுதி செய்ய ஒரு பழத்தை அவர்களுக்கு முன்னே பறித்துப் போட்டார். பழம் விழுந்ததும் மேலே நோக்கிய இருவரும் வில்லை தொடுக்காமல் அனுமனைக் கண்டு கைகூப்பி வணங்கினர். மெய் சிலிர்த்துப் போனார் அனுமார். இப்படிப் பணிவானவர்களை வேட்டையாடுபவர்கள் என்று நினைத்துவிட்டோமே என்று பதறினார். மிதிலையில், மாடத்திலிருந்து சீதையும் ராமரும், கண்ணும் கண்ணும் நோக்கியபோது எப்படி காதல் வயப்பட்டார்களோ, அப்படி ராமரைக் கண்டவுடன் முதல் பார்வையிலேயே அனுமன் அவரது பக்தனாகி விட்டார். உடனே அதிவேகமாகக் கீழே இறங்கி அவர்களை வணங்கினார். யார் என்ன என்று விசாரித்து அறிந்துகொண்டார்.