
மராட்டி தேசத்து அவந்தியூரில் காலை நாவிதர்களெல்லாம் கூட்டமாக பேசிக் கொண்டார்கள். "இப்படி ஒருத்தன் இருப்பானோ. அரசவை நாவிதன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா." என்று சொல்லிக் கொண்டிருத்தார்கள். விஷயம் இதுதான்.
சேனாயிக்கு ஆஸ்தான நாவிதன் பதவி கொடுத்து ஒரு பெரிய வீடு கணிசமான ஊதியம் தரப்பட்டது. குடும்ப பராமரிப்பை அரசாங்கமே ஏற்றது. தினமும் காலையில் அரண்மனைக்குள் சென்று மன்னருக்கு முடி திருத்த வேண்டும். வேறு யாருக்கும் இதை செய்யக்கூடாது.
ஆனால் அவன் ஒரு பாண்டுரங்க பித்தன். பண்டரிபுரம் கிருஷ்ணன் மீது அளவற்ற பக்தி உள்ளவன். சதா சிந்தனையில் ஆழ்ந்து பரவச நிலைக்கு போய்விடுவான். காலை வேளை மட்டும் அவன் மனைவி உலுக்கி அரண்மனைக்கு ஊழியம் செய்ய அனுப்புவாள்.
இன்று வெளியூரிலிருந்து வந்த பஜன கோஷ்டியுடன் அவர்களோடு சேனாயி பண்டரிபுரம் போய்விட்டான். அவந்தியூரில் வாழும் முடி திருத்தர்கள் கூடிக்கூடி பதட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்.