
“ஆசை இருக்கு தாசில் செய்ய! அதிர்ஷ்டம் இருப்பதோ மாடு மேய்க்க!” என்ற சொலவடை கிராமப் புறங்களில் மிகவும் பிரசித்தம்!
”வெளக்கெண்ணையை ஒடம்பு பூரா தடவிக்கிட்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்!” என்றும்,
“விடியாமூஞ்சி வேலைக்குப்போனா… வேலை கெடைச்சாலும், கூலி கெடைக்காது!” என்றும், விதியை விளக்கும் ஏகப்பட்ட சொலவடைகள் நமது நாட்டுப் புறங்களில் மிக அதிகமாகவே உண்டு!
சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சிகளெல்லாம் கூட அந்த விதி எப்படி விளையாடும் என்பதைக் கணிக்கும் செயல்கள்தான்!
இதோ ஒரு கதை....
அது 15 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஆன்மீகக் குழு!
கடவுளின் புனிதத்தை மக்கள் மத்தியில் பரப்புவதும், ஏழை, எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதுந்தான் குழுவின் பணி!
குரு கனிவும், கண்டிப்பும் நிறைந்தவர். அப்பழுக்கில்லாதவர். அன்பே வடிவானவர்! அவருக்கு வயதாகிவிட்டபடியால், இப்பொழுதெல்லாம் முன்புபோல அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை!