பூதங்கள் கட்டிய சிவாலயம்!

பூதங்கள் கட்டிய சிவாலயம்!
Published on

சிவபெருமானுக்கு பூதங்களால் கட்டப்பட்ட கோயில் குறித்து பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தக் கோயில் மிகவும் சிறியதுதான். ஆனால், இதன் பெருமையோ மிகப் பெரிது. ஸ்ரீபெரும்பூதூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது ஸ்ரீராமானுஜர் ஆலயம்தான். ஆனால், அதே ஊரில் பழைமையும் பெருமையும் கொண்ட சிவபெருமான் ஆலயம் ஒன்றும் உள்ளது. சைவமும் வைணமும் இணைந்து தழைத்ததற்கு இந்த இரு கோயில்களே  சாட்சி.

ஒரு சமயம் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின்போது  அவரது ஆடைகள் நெகிழ்ந்தது. அதனைக் கண்ட பூத கணங்கள் சிரித்ததால் சிவபெருமான் கோபம் கொண்டு அவர்களை கயிலாயத்தை விட்டு அகலுமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு தங்களது தவறை உணர்ந்த பூத கணங்கள், சிவபெருமானை குறித்து இத்தலத்தில் கடும் தவம் புரிந்தனர். அப்போது பெருமாள், ஆதிகேசவப் பெருமாளாக பூத கணங்களுக்குக் காட்சி தந்தார். பின்னர் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோசனம் பெற வழி செய்ததாக வரலாறு.

Picasa

பெருமாளின் அருள் கடாட்சத்தால் சாப விமோசனம் பெற்றதால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூத கணங்களுக்குக் காட்சி தந்து அவர்களின் தவறை  மன்னித்து அருள்புரிந்தார். சிவபெருமான் தங்களின் தவறை மன்னித்ததால் அவருக்கு ஒரு கோயில் எழுப்ப பூத கணங்கள் விரும்பினர். எனவே, சிவபெருமானின் அனுமதியுடன் பூத கணங்கள் கோயில் எழுப்ப முயன்றபோது தடைகள் பல வந்தது. இதனால் பூதகணங்கள் அந்தத் தடையை நீக்க முதலில் ஜெய பூத விநாயகர் ஆலயத்தைக் கட்டினர். அதன் பின்னரே சிவபெருமானுக்கு இந்தக் கோயிலைக் கட்டி முடித்ததாக வரலாறு.

பூத கணங்களால் கட்டி எழுப்பப்பட்ட அந்தக் கோயில்தான் தற்போது ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஸ்ரீபூதபுரீஸ்வரர் கோயில் எனும் பெயரில் திகழ்கிறது. பூதங்களால் உருவாக்கப்பட்டதால் இந்தத் தலம் ‘பூதபுரி’ என்றும், பஞ்சபூதங்கள் வழிபடுவதால் ‘பூதூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்பூதூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ள இந்தக் கோயிலில் அருள்மிகு சவுந்தரநாயகி, ராஜகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், அனுமன், துர்கை, பிரம்மா, விஷ்ணு, தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயில் மிகவும் சிறியதுதான். ஆனால், இதன் கட்டடக் கலை அனைவரையும் வியக்க வைக்கும். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாண உத்ஸவமும் தேர் திருவிழாவும் விசேஷமாக நடைபெறுவது வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com