தோஷங்களைத் தீர்க்கும் குரு பகவான் திருத்தலங்கள்!
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் குரு பெயர்ச்சி இந்த ஆண்டு திருக்கணிதப்படி இன்று 22.4.2023 நடைபெறுகிறது. இன்று இரவு 11.26 மணிக்கு மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் நுழைகிறார்.
குரு பகவானைக் குறித்து சில தகவல்கள்:
திசை - வடக்கு, பிடித்த ராசி – தனுசு மற்றும் மீனம், அதிதேவதை – பிரம்மா, நிறம் – மஞ்சள், தானியம் - கொண்டக் கடலை, உலோகம் – தங்கம், நெய்வேத்தியம் – கடலைப்பொடி, வாகனம் – யானை, நட்பு கிரகம் – சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய், பகை கிரகம் – புதன் மற்றும் சுக்கிரன், மனைவி – தாரை, குழந்தைகள் - பரத்வாஜர், எமகண்டன், கசன், விசேஷ தலம் – ஆலங்குடி, திருச்செந்தூர், ஆங்கிலப் பெயர் - ஜுபிடர், பிற பெயர்கள் - பிரகஸ்பதி, தேவகுரு, வியாழன், வழிபாட்டுப் பலன் – திருமணம், குழந்தைப் பேறு, படிப்பு, பணம்!
குருவருள் தரும் தலங்களில் முதன்மையானதாகத் திகழ்வது திட்டை குரு கோயிலாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற அருட்தலம். நின்ற கோல குரு பகவானை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். சாமி சன்னிதிக்கும் அம்பாள் சன்னிதிக்கும் இடையே சோமாஸ்கந்தர் சன்னிதி கொண்டு அருள்புரிகிறார். இந்தத் திருத்தலம் தங்கை மெலட்டூர் பேருந்து தடத்தில் உள்ளது.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அருளும் திருத்தலம் பட்டமங்கலம் ஆகும். ஒருசமயம் கார்த்திகை பெண்கள் அஷ்டமா ஸித்திகளை தங்களுக்கு உபதேசிக்குமாறு சிவனை வேண்டினர். அதன்படி சிவபெருமான் அவர்களுக்கு உபதேசித்தபோது, அவர்கள் உபதேசத்தில் கவனம் செலுத்தாது போனதால் கோபம் கொண்ட சிவன், அவர்களை கல்லாக சபித்து பட்டமங்கலத்தில் உள்ள ஆலமரத்தடியில் விளங்கும்படி செய்தார். அவர்களை மட்டுமல்லாது, அன்னை பார்வதியையும் காளி ரூபமாக மாறும்படி சபித்தார்.
காளி ரூபம் கொண்ட பார்வதி, சிவனை தொடர்ந்து வழிபட்டு வந்ததால் மனம் மகிழ்ந்த சிவன், உமையவளுக்குக் கொடுத்த சாபத்தை நிவர்த்தி செய்தார். இன்றும் நவ்வையடிக் காளி என்ற நாமத்தோடு அன்னை அருள்பாலிக்கும் தனிக்கோயில் இந்தத் தலத்தில் உண்டு. மேலும் சிவபெருமானே தட்சிணாமூர்த்தி வடிவில் இத்தலம் வந்து கல்லாய் சமைந்த கார்த்திகைப் பெண்களுக்கு விமோசனம் தந்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள பட்டமங்கலம் திருத்தலம் வந்து இங்குள்ள அஷ்டமா ஸித்தி குளத்தில் நீராடி இறைவனை வணங்கி, இத்தல ஆலமரத்தை வலம் வந்தால் மண வாழ்வு, மக்கள் செல்வம் கிடைக்கும்.
திருச்சிக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமர்கோவில் மும்மூர்த்தி தலம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்தில் சப்த குருக்கள் அருள் புரிகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். மும்மூர்த்திகளோடு முப்பெரும் தேவியரும் அருள்தரும் திருத்தலம். சப்த குருக்கள் அருளால் தோஷம் நீக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. இக்கோயிலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனை புதன்கிழமையிலும், வியாழக்கிழமையில் பிட்சாடனரையும், வெள்ளிக்கிழமை அன்று பிரம்மாவையும் வழிபட்டால் தோஷங்கள் யாவும் அகலும் என்பது ஐதீகம். மேலும், இங்குள்ள சப்த குருக்களை ஒரே சமயத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் அகல்வதோடு, கல்வி, செல்வம், புகழ் ஆகியவை பெற்று விளங்கலாம் என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. குரு பெயர்ச்சியையொட்டி சகல தோஷங்களும் நீங்க இத்தல குரு பகவான்களை தரிசித்து அருள் பெறுவோம்.