தட்சிணாமூர்த்தியின் வெவ்வேறு அபூர்வமான வடிவங்கள் உள்ள கோவில்கள்!

ஆலங்குடி தட்சிணாமூர்த்தி...
ஆலங்குடி தட்சிணாமூர்த்தி...

64 சிவ திருமேனிகளில் ஒன்றாக தக்ஷிணாமூர்த்தி வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் குரு பகவானுக்கென்று ஆலங்குடியில் அழகான கோவில் அமைந்துள்ளது. அந்த குரு ஞான தக்ஷிணாமூர்த்தியாக பல ஊர்களில் வீற்றிருக்கிறார்.

ஞான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, வியாக்கியான தட்சிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லக்ஷ்மி தக்ஷிணாமூர்த்தி, ராஜ தக்ஷிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என தக்ஷிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கழுகுமலையில் ஒரு கையை தரையில் ஊன்றியபடி சற்று சாய்ந்தவாறு போதனை செய்யும் விதமாக தக்ஷிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் ரிஷபத்தின் மீது கையை ஊன்றிய படியும், இடது கையில் சுவடி ஏந்திய படியும் அபூர்வமான தோற்றத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

பெருமாள் கோயில்களில் ஸ்ரீரங்கம் ஏழு பிரகாரங்களை கொண்டது. அதுபோல் சிவாலயங்களிலும் ஏழு பிரகாரங்களைக் கொண்டது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் 7 கோபுரங்கள், 7 பிரகாரங்கள், 7 கிணறுகள் என்று உள்ளது. இத் தலத்தில் தக்ஷிணாமூர்த்தி தனியாக அம்பிகையுடன் "சாம்ப தட்சிணாமூர்த்தி" என்னும் பெயரில் காலடியில் நந்தி படுத்திருக்க அதன் முதுகில் வலது காலை ஊன்றி காட்சி தருகிறார்.

"சக்தி தக்ஷிணாமூர்த்தி"யாக சென்னை பெரியபாளையம் பாதையில் உள்ள திருக்கண்டலம் என்னும் திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தி அம்பிகையுடன் காட்சி தருகிறார்.

தக்கோலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் ஆலயத்தில் "உத்குடிகாசன தக்ஷிணாமூர்த்தி" யாக இடது கரத்தை முழந்தாளின் மீது நீட்டியுள்ள யோக வடிவமாகும். திருவெண்காட்டு தலத்திலும் இக்காலத்தில் காட்சி தருகிறார்.

"நாதகுரு தட்சிணாமூர்த்தி" என்ற பெயரில் திருமங்கலக்குடி திருத்தலத்தில் காட்சி தரும் தக்ஷிணாமூர்த்தி விக்கிரகத்தை தட்டிப் பார்த்தால் கணீரென்று வெண்கல மணி சத்தம் கேட்கும். அதனால் இந்த தட்சிணாமூர்த்திக்கு "நாதகுரு தட்சிணாமூர்த்தி" என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
அறிவு முக்கியமா? அன்பு முக்கியமா..?
ஆலங்குடி தட்சிணாமூர்த்தி...

தாராசுரம் என்ற திருக்கோவிலில் 28 திருவுருவங்களில் அழகழகாய் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இப்படி ஒரு அமைப்பு வேறெங்கும் இல்லை.

கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயிலில் மிருதங்கம் வாசிப்பது போன்ற அமைப்பிலும், புகழ்பெற்ற பாதாமி குடைவரைக் கோவிலில் வீணை ஏந்தியபடியும்  தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

திருவைகாவூர் திருத்தலத்தில் கையில் கோலேந்தியபடி ஈன்ற திருக்கோலத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

பொதுவாக சனகாதி முனிவர்கள் எனும் நான்கு சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருவது அபூர்வமானதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com