ராகு, கேதுவை குண்டலங்களாக அணிந்திருக்கும் பொன் காளி!

பொன் காளியம்மன்
பொன் காளியம்மன்
Published on

பெண்களின் குறைகளை போக்கும் மகா சக்தியாக பொன் காளியம்மன் விளங்குகிறாள். ஈரோடு அருகில் உள்ள சிவகிரி தலையநல்லூரில் இந்த பொன் காளியின் திருக்கோவில் இருக்கிறது. ஊரின் பெயரே 'நல்லோர் தலைகாக்கும் நல்லூர்'. அதனால் தான் 'தலையநல்லூர்' எனும் பெயர் பெற்றது.

இந்த பகுதி ஒரு காலத்தில் மலையும் காடுமாக இருந்தது. காட்டில் ஒரு அசுரன் வசித்து வந்தான். அவன் காட்டு வழியே வந்த பெண்களை கெடுத்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். தலையநல்லூரில் மங்கையர்க்கரசி என்ற மங்கை வசித்தாள். உண்மையாகவே இவள் ஒரு மங்கையர்கரசி. நல்ல அழகி. சிவ பக்தை. சிவனின் திருவடிகளில் சேர வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக காட்டுக்கு போய் தவம் செய்தாள். அரக்கன் அவளை பார்த்துவிட்டான். தபசினி என்றும் கருதாது அவளது அழகில் கருத்தழிந்து அந்த சண்டாளன் அவளை பெண்டாள முயற்சித்தான். அவள் மலை மீது ஏறி ஓடினாள். அரக்கன் விரட்டிக் கொண்டு வந்தான்.

"சிவனே! நான் உன் பொருள்; என்னை காப்பது உன் கடமை" என்று கதறி கைகூப்பினாள் மங்கையர்க்கரசி. கைலாயத்திலிருந்த சிவனுக்கு அவளது குரல் கேட்டது. அவளின் அபயம் தீர்க்க அவர் மலைமீது எழுந்தருளினார். இதனால் மலை சிவகிரி என்று பெயர் பெற்றது.

சிவன் கோபமுற்று அரக்கனின் தலையை கிள்ளி எறிந்தார். ஆனால் தலை ஓடிவந்து உடலுடன் ஒட்டிக்கொண்டது. அரக்கன் சிரித்தான். எந்த சக்தியாலும் என்னை அழிக்க முடியாது என்று கொக்கரித்தான். உடனே சிவன் சக்தியை அழைத்தார். சக்தியும் அங்கே எழுந்தருளினாள்.

"நான் மகா சக்தி" என்று சொல்லிக் கொண்டு அரக்கனை ஈட்டியால் குத்திக் கொன்றாள். அந்த பெண் சக்தியின் காலில் விழுந்து வணங்கினாள்.

இதையும் படியுங்கள்:
நட்சத்திர மர்மங்கள்! இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்!
பொன் காளியம்மன்

"அம்மா தாயே! பெண்களின் துயரம் தீர்த்துக் காப்பாற்ற நீ இங்கேயே தங்கிவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள்.

பொன்மகளும் அப்படியே வரம் அளித்தாள். அன்று முதல் தேவி தலையநல்லூரில் பொன்காளியாக வீற்றிருக்கிறாள். பொன் காளிக்கு ஊர்மக்கள் கோவில் கட்டினார்கள். அந்த கோவில்தான் பெருங்கோவிலாக பெருமை சேர்க்கிறது. கோவில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. அம்மன் கோவில் வடக்கு பக்கம் பார்த்த அமைவது சிறப்பு என்பார்கள். இமயத்தில் இருக்கும் இறைவனை அம்மன் பார்ப்பதாக ஐதிகம்.

கோவிலின் எதிரில் தெற்கு நோக்கி இரு குதிரைகள் உள்ளன. ஒன்று கருப்பண்ணசாமிக்கு உரியது; மற்றது பொன் காளியம்மனுக்கு சொந்தம். வாசலில் வில்வ மரத்தடியில் பிள்ளையார் கோவில் அமைந்திருக்கிறது. வசந்த மண்டபம், மகா மண்டபம் தாண்டி போனால் வரம் அருளும் பொன்காளியம்மனை தரிசிக்கலாம். பத்ம பீடத்தில் வலக்காலை குத்து காலிட்டு நெருப்புச் சுடர் மகுடத்துடன் அமர்ந்திருக்கிறாள்.

பொன் காளியம்மனுக்கு எட்டு திருக்கரங்கள். அந்த கைகளில் நமது பாவங்களை சுட்டெரிக்கும் நெருப்பு, துன்பங்களிலிருந்து நம்மை காக்கும் கேடயம், திரிசூலம், குறுவாள், மணி, கபாலம், பாம்பு ஆகியவற்றுடன் காட்சி தருகிறாள். கலை வேலைப்பாடு நிறைந்த அழகான சிலை.

ராகு கேதுகளை குண்டலங்களாக பொன் காளி காதுகளில் அணிந்திருக்கிறாள். எனவே ராகு கேது தோஷம் நீக்கும் பரிகாரத்தலமாக இந்த தலம் விளங்குகிறது. ராகு கேது தோஷத்தால் திருமணம் தடைபடும் பெண்களும் நாகதோஷத்தால் பிள்ளை பேறு தடைபடும் பெண்களும் இங்கு வந்து தோஷ பரிகாரம் செய்து பலன்கள் காண்கிறார்கள்.

பல்லி சகுனம் பார்ப்பது இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு. திங்கள் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை பல்லி சகுனம் சொல்லும். நினைத்தது நடக்குமா? திருமணம் செய்யலாமா? தொழில் தொடங்கலாமா? வேலை கிடைக்குமா? பதவி உயர்வு கிட்டுமா? என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் கோரிக்கைகளை பொன் காளி உடனே நிறைவேற்றி வைக்கிறாள். பங்குனி திருவிழா பத்து நாட்கள் இந்த கோவிலில் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் அருகில் உள்ள ஊஞ்சலூர் ஆற்றிற்கு சென்று தீர்த்தம் கொண்டு வருவார்கள். அன்று பெண்கள் விரதம் தொடங்குவார்கள். பத்தாம் நாள் பெண்கள் பொங்கல் வைப்பார்கள். ஈரோட்டில் இருந்து திருக்கோவிலுக்கு பேருந்து செல்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை; குரங்கு தோஷம்!
பொன் காளியம்மன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com