அரும்பெருமை வாய்ந்த நமது முன்னோர்கள் சிவ வழிபாட்டையே தமது உயிர் மூச்சாகக் கொண்டிருந்தனர். அவர்கள் செய்த தொண்டுக்கு நிகராக தற்காலத்தில் நாம் செய்ய முடியாத போதிலும், புதிய ஆலயங்கள் கட்டுவதை விடுத்து, பழமை வாய்ந்த சிவாலயங்களையும், வைஷ்ணவாலயங்களையும் சீர்தூக்குவதே சாலச் சிறந்ததாகும். அவ்வாறான பழைமை மிக்கச் சிவாலயங்களை சீர் செய்தால், நம் தலைமுறைகள் சிறக்கும் என்பதோடு, நாமும் வாழ்த்தப்படுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் பழைமை வாய்ந்த முள்ளண்டிரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊருக்கு ஓர் முக்கியச் சிறப்பு உண்டு. அது, திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, திருப்புகழ் ஆசிரியராய் விளங்கிய அருணகிரிநாதர் பிறந்தது இந்த ஊரில்தான்.
சென்னை, அரசுக் கையெழுத்துப் பிரதி நிலையத்தில் அருணகிரிநாதர் குறித்த குறிப்பு உள்ளது. சுமார் 100 ஸ்லோகங்களைக் கொண்ட, ‘விபாகரத்த மாலிகை’ என்னும் வடமொழி நூல், ‘அருணகிரிநாதர் முள்ளண்டிரத்து டிண்டிமக் கவிகளுள் ஒருவர்’ எனக் கூறுகிறது. அதோடு அதில் இவர் வாழ்ந்த காலம் 1400 - 1490 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இவ்வூருக்கு அருகில், ‘சோமநாதன் மடம்’ என்று அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற, ‘12 புத்தூர்’ தலம் உள்ளது மேலும் ஓர் சான்றாக உள்ளது.
கங்கைக் கரையில் வாழ்ந்த எட்டு கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள், கங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தென்னாடு வர, அவர்களை சோழர்கள் வரவேற்றனர். அவர்களுக்கு மெத்தப்பாடி, முள்ளண்டிரம், அத்தியூர் என்கிற மூன்று அக்ரஹாரங்களை நிறுவி, அதை அவர்களுக்கு சர்வ மானியமாக அளித்தனர். இதில் ஆதியில் முல்லை வனமாகத் திகழ்ந்த முள்ளண்டரத்தில் கௌதம கோத்திரத்தின் வழிவந்த இராஜநாதகவி - அபிராமி நாயகி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவரே சோணதரர். அவரே பின்னாளில் அருணகிரிநாதர் என அழைக்கப்பட்டார். இவர் இவ்வூரில் அன்னம், தண்ணீர், தூக்கம் இன்றி ஈசனிடம் மனம் லயித்தபடி தவம் கிடந்தார். இறைவன் அவர் முன் தோன்றி, தமது வாயில் இருந்த தாம்பூலத்தை சோணதரர் வாயில் இட்டு மறைந்தார். அடுத்த கணமே அவருக்கு அனைத்துக் கலைகளும் அத்துப்படியாயின அருணகிரிநாதருக்கு. அதன் பின் அவர் வடதிசை நோக்கி யாத்திரை சென்றார். தில்லியை ஆண்ட முகலாய மன்னன் இவரது கவித்திறமையைக் கண்டு மெச்சி, பல பரிசுகளைத் தந்ததோடு, ‘விந்திய டிண்டிமக்கவி’ என்கிற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தான்.
ஊர் திரும்பினார் சோணதரர். மன்னன் பிரபுடதேவராயன் இவருக்கு அளித்த நிலத்தை பண்படுத்தி, உழும் வேளையில் ஏர்க்கலப்பையில் வெட்டுப்பட்டு, சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. வெட்டுப்பட்டதன் காரணமாக வருந்தினாலும், ஈசன் தனது ஊரில் வெளியானதை நினைத்து, அவரை வணங்கி வழிபட்டு மகிழ்ந்தார். இச்செய்தியை மன்னர்களிடம் தெரிவித்து, ஆலயம் எழுப்பி ஆனந்தமடைந்தார். இன்றும் இப்பதி சிவலிங்கத்தின் சிரசில் ஏர் கலப்பையால் உடைந்த பகுதி பளிச்செனத் தெரிகிறது. அதோடு, தனது இஷ்ட தெய்வமான அருணாச்சலேஸ்வரர் - அபீதகுஜாம்பிகைக்கும் மன்னரின் துணையால் ஆலயம் எழுப்பி வழிபட்டுள்ளார் அருணகிரி வள்ளல். பின்னர் விதிவசத்தால் முறை தவறிப்போய், அண்ணாமலை ஆறுமுகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.
மகான் ஸ்ரீ அருணகிரிநாதரால் உருவான இந்த ஆலயம் இன்று மண் சரிந்து, கட்டடத்தின் கற்கள் தகர்ந்து, சிதைந்து கிடக்கிறது. இவ்வாலயத்தின் முகமண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் காணக் கிடைக்காத பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. கோயில் எதிரே அமைந்துள்ள திருக்குளம் மண்மூடி மறைந்துள்ளது.
அருணகிரிநாதரால் வெளிப்பட்டு, அரசர் காலத்தில் கோலோசிய இந்த சிவாலயத்தை மீட்டு திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்திட போதிய நிதியும், பொருளும், ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. புரவலர்கள் தங்கள் மேலான கைங்கர்யத்தை செய்த இவ்வாலயத்தை புத்தொளி வீசச் செய்து புண்ணியம் செய்து கெள்வீர்.