நம் பாரத தேசத்தின் புகழ் பெற்ற கோயில்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலும் ஒன்றாகும். இது உலகின் மிகப்பெரிய புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஸ்ரீ ஐயப்பனை வழிபட இந்தத் தலத்திற்கு புனித யாத்திரையாக வருகிறார்கள். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 18 மலைகளால் சூழப்பட்ட கோயிலாகும் இது.
இந்தக் கோயில் மலையாள மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காகத் திறக்கப்படும். மற்றபடி விசேஷ பூஜை நாட்களான மண்டல பூஜை நாட்களின்போது (உத்தேசமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை), மகர ஜோதி தரிசன நாளான உத்திராயண சங்கராந்தி தினம் மற்றும் விஷு புண்ய காலமான ஏப்ரல் 14 இங்கே விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுவதால், அந்த நேரத்தில் தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
சபரிமலைக்குச் செல்லும் புனிதப் பாதையில் சபரிமலை கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது பஸ்ம குளம். இது ஒரு விசேஷமான இடமாகும். இது ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வனப்பாதையில் அமைந்துள்ள மிகப் புனிதமான குளமாகும். புராணத்தின்படி சபரிமலை ஸ்ரீ ஐயப்பன், அரக்கி மகிஷியை போரிட்டு வென்ற பிறகு இந்தக் குளத்தில்தான் நீராடினார் என்று சொல்லப்படுகிறது.
'பஸ்ம' என்றால் புனித சாம்பல் என்று பொருள். அந்த சாம்பல் இந்தக் குளத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இது 'பஸ்ம குளம்' என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இக்குளத்தை மிகவும் புனிதமாகக் கருதி இதில் பக்தியோடு நீராடுகிறார்கள்.
சபரிமலைக்குச் செல்லும் வழியில் இந்த 'பஸ்ம குளம்' உள்ளதால் பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக செல்லும்போது கோயிலுக்கு செல்லுமுன் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள இந்தக் குளத்தில் நீராடுகிறார்கள். சபரிமலைக்குச் செல்லும் ஆன்மிகப் பயணத்தில் இந்தக் குளத்தில் நீராடுவதும் ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்பட்டு பக்தர்கள் இதில் நீராடுகிறார்கள்.
இடையில் இரண்டு ஆண்டுகள் இந்தக் குளத்தில் நீராடுவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது இக்குளத்தின் சுத்திகரிப்பு வேலைகளுக்குப் பின்பு திரும்பவும் இந்த பஸ்ம குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுள்ளது. இக்குளத்தின் புனிதத் தன்மை கெடாமல் பாதுகாக்க இந்தக் குளத்தில் சோப்பு, எண்ணெய் ஆகிய பொருட்கள் பயன்படுத்தாமல் நீராட வலியுறுத்தப்பட்டுள்ளது. குளத்தில் துணி உள்ளிட்டவற்றை வீசவும் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே நீராடிய பிறகு 18 படிகள் ஏறிச் சென்று பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.
தற்போது பஸ்ம குளத்தை சுத்தமாகப் பராமரிக்க, குளத்தில் உள்ள தண்ணீர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள உரல் குழி வழியாக தீர்த்தம் பாயும் வகையில் வழியும் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும், இம்மலைக்குச் செல்லும் புனிதப் பாதையில் உள்ள பஸ்ம குளத்தில் புனித நீராடி, ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்கிறார்கள்.