உலகிலேயே பெரிய ஸ்ரீநடராஜர் சிலை!

உலகிலேயே பெரிய ஸ்ரீநடராஜர் சிலை!

– ஜே.வி.நாதன்

வேலூருக்கு அருகில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உலகிலேயே மிகப் பெரிய ஸ்ரீநடராஜர் சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது என்பது ஆன்மிக அன்பர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்!

தமிழகத்தில் வேலூருக்கு 6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபுரம் என்ற சிற்றூரில் பிரம்மாண்ட பரப்பளவில் ஸ்ரீ மகாலட்சுமி பொற்கோயில், நீர் சூழ்ந்த பரப்புக்கு நடுவே 1500 கிலோ தங்கம் கொண்டு கட்டப்பட்டு, தக தகவென்ற ஜொலிப்புடன் அழகாகக் காட்சியளிக்கிறது.

இந்த ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பிரமிப்புடன் படையெடுப்பதற்கு இதனுள் அமைந்திருக்கும் வேறு பல அற்புதங்களும் காரணமாக உள்ளன.

ஸ்ரீபுரம் ஆலயத்தினுள் ஒரு யாக குண்டம் இருக்கிறது. இதில் காலை, மாலை இரு வேளைகளும் ‘ஸ்ரீ சுக்த யாகம்’ என்பது தேர்ந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு, யாக குண்டத்தின் அருகில் பக்தர்களை அமர வைத்து செய்யப்படுகின்றது.

இங்கு நிகழ்த்தப் பெறும் யாகக் கலச நீரைக் கொண்டுதான் மூலவர் ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்குத் தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த யாக குண்டத்தின் அருகில் அமைந்துள்ளது அபூர்வமான ஸ்ரீ சொர்ண மகாலட்சுமி என்கிற 70 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட அழகான தங்கச் சிலை. இந்த மகாலட்சுமிக்குப் பக்தர்கள் தங்கள் கையால் வெள்ளிச் செம்பில் புனித நீர் எடுத்து அபிஷேகம் செய்து ஸ்ரீ சொர்ண லட்சுமியின் அருளைப் பெறலாம்.

இவை மட்டுமல்ல; இங்கு ஒரு வெள்ளிப் பிள்ளையார் 1700 கிலோ எடை வெள்ளி கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மகாகணபதி என்பது திருநாமம். தனிச் சந்நிதியின் உறைந்திருக்கும் இவர், பக்தர்களுக்கு செல்வத்தையும், ஞானத்தையும், சாந்தியையும் அருள்வதோடு, தொழில் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் வழங்கி, குடும்பத்தில் சந்தோஷத்தையும் செழிக்கச் செய்கிறார் என்று கூறப்படுகிறது.

இத்தனைச் சிறப்புகளுக்கு மேலாக இன்னொரு பெருமையும் சிறப்பும் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு வெகு விரைவில் ஏற்படவிருக்கிறது.

உலகிலேயே மிகப் பெரிய ஸ்ரீநடராஜர் சிலையை உருவாக்கி இந்த ஆலய வளாகத்தில் நிறுவ வேண்டும் என்பது ஸ்ரீபுரம் ஸ்ரீஅம்மாவின் வெகு நாளையக் கனவு. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி என்ற ஊரில் உள்ள ஒரு சிற்பக் கூடத்துக்கு இந்த ஸ்ரீநடராஜர் திருவுருவச் சிலையைச் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீநடராஜரின் நடனத் திருக்கோலத்தில், 23 அடி உயரம், 17 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக, உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை 2012-ல் துவங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதனுடைய எடை 15,000 கிலோ. ஐம்பொன் சிலையாக அற்புத அழகோடு வடிக்கப்பட்டுள்ளார் இந்த ஸ்ரீநடராஜர்.

இதுகுறித்து ஸ்ரீபுரம் ஆலயப் பொறுப்பாளார்களை விசாரித்தோம்..

‘‘ஸ்ரீநாராயணி தங்கக் கோயில் வளாகத்தில் ஸ்ரீநடராஜர் திருவுருவச் சிலை நிறுவ இடம் தேர்வு செய்வதில் ஸ்ரீஅம்மா முனைந்திருக்கிறார். இடம் தேர்வு ஆனபின் திம்மக்குடியிலிருந்து 15 டன் எடையுள்ள நடராஜர் ஐம்பொன் சிலையானது சாலை வழியாக ஸ்ரீபுரத்துக்குக் கொண்டு வரும் பெரிய பணி நிறைவேற்றப்பட இருக்கிறது. சிலை நிறுவப்பட்டபின், பக்தர்கள் மனம் குளிர, ஸ்ரீநடராஜர் தரிசனம் பெற்று மகிழ இருக்கிறார்கள்.

ஸ்தாபித விழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல ஆன்மிகத் துறவிகள், பெரியவர்கள், பக்தர்கள் வரவிருக்கிறார்கள். ஸ்ரீபுரம் அம்மா இந்த விழாவில், மிகப் பெரிய முதல் பூஜையைத் தம் திருக்கரத்தால் நிகழ்த்தவிருக்கிறார்’’

-என்று நம்மிடம் தெரிவித்தனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர், ஸ்ரீபுரத்திலும் நடனமிடும் அந்தப் பொன்னான நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள், ஆன்மிக ஆர்வம் கொண்ட பக்தகோடிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com