தீராத நோயைத் தீர்க்கும் மருத்துவர்!

தீராத நோயைத் தீர்க்கும் மருத்துவர்!
Published on

ருந்தீஸ்வரர் என்பது அந்தக் கோயிலுக்குப் பொருத்தமான பெயர்தான். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றாலே உடலும் மனமும் ஆரோக்கியமாவது போன்று உணரலாம். கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில் மரங்களின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் அமைதியான சூழ்நிலையும் பழைமை மாறாத அதன் தன்மையும் சிவ தரிசனத்தை மேலும் விசேஷமான அனுபவமாக்குகின்றன.

சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெருமை உடையது. ஏழாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் சிவன் மருந்தீஸ்வரராகவும் பார்வதி திரிபுரசுந்தரியாகவும் வீற்றிருக்கிறார்கள். இந்தக் கோயில் உருவான கதையே இதன் மருத்துவ குணத்தைப் பறைசாற்றுகிறது.

ரு முறை அகத்தியர் இத்தலத்தின் வழியாக பயணிக்கும்போது இந்தத் தலத்தின் மகிமை உணர்ந்து இங்கிருக்கும் குளத்தில் நீராடி பின்னர் சிவனை வேண்டினாராம். அவர் முன்னால் சிவன் காட்சியளித்ததும் அவரிடம் உலகில் தோன்றியுள்ள நோய்களையும் அதைத் தீர்க்கும் வழிமுறைகளையும் கேட்டார் அகத்திய முனி. நோய் தீர்க்கும் முறைகளையும் அதற்கான மூலிகைகளையும் சிவன் அவருக்கு விளக்கினாராம்.

ஈசனின் விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பற்றி உபதேசித்ததால் இத்தல ஈசன் மருந்தீஸ்வரர் என்று வழங்கப்பட வேண்டுமென்றும் இங்கே வந்து அவரது திருவடிகளை வணங்குபவர்கள் நோயற்ற வாழ்வைப் பெற வேண்டுமென்றும் வரம் கேட்டுப் பெற்றாராம். இதனால்தான் இங்குள்ள சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

க்கோயில் பாடல் பெற்ற திருத்தலம். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்து சிவனைத் தரிசித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். கோயிலின் தல விருட்சம் வன்னி மரம். இந்த வன்னி மரத்தருகேதான் ஈசன் இரு முறை தோன்றியுள்ளார். திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு ஒரு முறையும், நடனமாடும் நிலையில் வால்மீகி முனிவருக்கு ஒரு முறையும் காட்சியளித்துள்ளதாக ஐதீகம். வால்மீகி முனிவர் இக்கோயிலுக்கு வந்து தரிசித்ததால் இவ்வூருக்குத் திருவால்மீகியூர் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் இப்பெயரே மருவி திருவான்மியூர் என்றானது. வால்மீகி நகர் என்ற பகுதி இப்போதும் இங்கு உள்ளது.

இந்தக் கோயிலில் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் தவிர, பால்வண்ணநாதன் ஔஷதீஸ்வரர் (ஔஷதம் என்றால் வட மொழியில் மருந்து என்று பொருள்) என்ற பெயர்களும் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com