திருவிழா… சோமயாகப் பெருவிழா!

திருவிழா… சோமயாகப் பெருவிழா!
Published on

63 நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாற நாயனார்.  அம்பர் மாகாளம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் மனைவி  சுசீலா தேவி. எம்பெருமான் சிவபெருமானிடம்  தீவிர  பக்தி கொண்டவர்.  திருவாரூர் மயிலாடுதுறை ஊர்களுக்கு இடையே உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு கிழக்கே அமைந்துள்ளது இவ்வூர். 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியது 'திருத்தொண்டத் தொகை ஒவ்வொரு சிவனடியார்கள் பற்றியும் அதில் பாடியுள்ளார்.

இந்த திருத்தொண்டத் தொகையின் சிறப்பு என்னவென்றால்  சிவபெருமான் "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும்  அடியேன்..." என்று முதலடியை எடுத்துக் கொடுக்க ஒவ்வொரு அடியாருக்கும் அடியேன் என்று தொடர்ந்து சுந்தரர் பாட  உருவானது.  அந்த பாடல்களில்... "அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்..." என்று  சோமாசி மாற நாயனார் பற்றி போற்றி பாடியிருப்பார்.

இத்தகைய பெருமையை கொண்ட சோமாசி மாற நாயனாருக்கு சோம யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

சோம யாகம் என்பது சோமலதையைப் பிழிந்து செய்யும்  யாகம். பகவத்கீதையில்  (9-20) கண்ணன் சோமலதையின்  பெருமைகளை சொல்கிறார். இதை அருந்துவோர் இந்திரலோக  பயன்களைப்  பெறுவர்.  இந்த தாவரம் இமயமலையின் வடமேற்குப் பகுதியான முஜாவத் பகுதியில் விளைந்தது என்றும் தற்போது அழிந்து விட்டதாகவும் லண்டன் சுவாமிநாதன் அவர்கள்  தனது TAMIL AND VEDAS தொடர் கட்டுரைகள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தான் நடத்த இருக்கும் அந்த யாகத்தில் அவிர் பாகம் வாங்க ஆரூர் தியாகராஜர் வரவேண்டும் என்று முடிவு செய்தார்.

ஆரூராரின் நெருங்கிய நண்பரான சுந்தரர் மூலம்தான் அதை நிறைவேற்றித் தர முடியும் என்பதை உணர்ந்த சோமாசி மாறர் சுந்தரரின் கபந் தீர தூதுவளம் பூ, காய், கீரையினை தினமும் கொடுத்து அவரின் நன்மதிப்பை பெற்றார். பிறகு தனது எண்ணத்தை சுந்தரரிடம் சொல்ல அவர் இறைவனை அழைத்து வர சம்மதம் தந்தார். இறைவனும் சுந்தரரிடம் தான் வருவதாக  ஒப்புக் கொண்டு குறித்த நேரத்தில் வருவேன் ஆனால் எப்படி வருவேன் என்று சொல்லவில்லை.

வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று திருமாகாளம் அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வேத விற்பனர்கள், முனிவர்கள், சான்றோர்கள் ஆன்றோர் பெருமக்கள்  கூடியிருக்க யாகம் தொடங்கியது.

அனைவரும் இறைவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க தாரை தப்பட்டை முழங்க இறைவன் நீச கோலத்தில் நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக மாற்றி மரித்த கன்றினை தோளில் சுமந்து விநாயகர், முருகரை குழந்தைகளாகவும் அம்பிகை மதுக்குடம் சுமந்து வர யாகம் நடக்கும் இடத்தை வந்து சேர்ந்தார். யாகத்திற்கு இடைஞ்சல் செய்ய வந்துள்ளான் என்று முனிவர்களும் ரிஷிகளும் பயந்து ஓட அவர்களின் அச்சத்தை போக்கி வந்தது இறைவன் என்று சோமாசி மாற நாயனாருக்கும் அவரது மனைவிக்கும் குறிப்பால் உணர்த்தினார் விநாயகர். 

அன்றிலிருந்து அந்த விநாயகர் 'அச்சம் தீர்த்த விநாயகர்' என்று அழைக்கப்படலானார். அனைவரின் அச்சம் நீங்க இறைவனுக்கு அவிர்பாகம் அளித்து சிறப்பு செய்கின்றனர். தியாகராஜரும் நீச உரு நீங்கி  அவரது உன்னத கோலமாகிய ரிஷபாரூடராக காட்சி கொடுத்தார்.

இந்த சோமயாகம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் பட்டு வருகிறது. சுந்தரருக்கு தூதுவளை கொடுக்கும் நிகழ்விலிருந்து தொடங்கி  சோம யாகம், காட்சி கொடுத்தல் தொடர்ந்து நடந்து சிறப்பாக முடிகிறது.

26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று 12-00 மணி அளவில் இந்த யாகம் திருமாகாளம் அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த யாகத்திற்காக  இறைவன் இவ்வூருக்கு எழுந்தருளுவதால் அந்நேரம் திருவாரூர் கோவிலில் நடை சாற்றப்படும். 

இவ்விழாவை ஒரு முறையாவது நேரில் கண்டுகளிக்க வாருங்கள். இறைவன் அனைவருக்கும் காட்சி கொடுப்பான். எல்லாம் நன்றாக  நடக்கும்.  எங்கும் சிவமயம்... அன்பு மயம்  ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com