சடாரி சாதித்தலின் மகிமை!

சடாரி சாதித்தலின் மகிமை!

வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால், அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி? பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆன பிறகு, சடாரி வைத்துக்கொள்கிறோம். இதன் பின்னணியை அறிந்துக் கொள்வோம்.

ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக தனது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, "கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன.

"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள்.

“பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. நீங்கள் உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள்” என்று கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவி தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்" என்று பதிலுக்கு வாதிட்டன.

கிரீடத்துடன் சங்கும் சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால் ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல், பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கிக் காத்து நின்றன.

கவான் வந்தார். அவரத பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னிதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட, ஸ்ரீ ராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களை பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக்கொள்ளும் பயன் இது" என்றார் பகவான். அதன்படி, வனவாசத்தில் ஸ்ரீராமபிரன் இருக்க, அவரது பாதுகைகள்தான் அவருக்கு பதில் ஆட்சி புரிந்தன என்பதை ராமாயணம் நமக்குக் கூறுகிறது.

பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய, 'நான்' என்ற கர்வம், அகங்காரம் அழிய வேண்டும் என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் இருக்கும் தாத்பரியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com