சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமாகவும், சனி மகா பிரதோஷம் என்றும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
சனி பிரதோஷம் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெறும். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பரிசி நெய் விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக கொடுக்கலாம். பின்பு அருகம்புல் பூச்சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
அகிலாண்டேஸ்வரி ஒரு முறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை பரிசாக தர, கன்னிகையும் அதனை எதிரில் வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் கொடுத்து சென்றாள். தேவலோகம் சென்ற துர்வாசர் அம்மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க, மாலையின் மகிமையை அறியாத இந்திரன் அந்த மாலையை தனது யானையிடம் தற யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர்; இந்திரனையும் தேவர்களையும் ஒருசேர சபித்தார். சாபவிமோசனம் பெற வேண்டி தேவரும் இந்திரனும் பரந்தாமனை வேண்டினர். மனம் இளகிய பரந்தாமனும் திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார்.
மந்திரகிரி மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாவும் கொண்டு அசுரர்கள் பாம்பின் தலைப்பகுதியை அசுரரும், வால் பகுதியை தேவரும் பிடித்து கடைய தொடங்கினர். மலை சாய்ந்தது உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மலையை தாங்கிப் பிடித்தார். அன்று பத்தாவது திதியான தசமி திதியாகும். மேலும் கடையும் பொழுது வாசுகி வலி தாங்காமல் விஷம் காக்க, அப்பொழுது கடலிலும் நஞ்சு தோன்ற இரண்டும் சேர்ந்து ஆலகாலம் என்ற கடுமையான விஷமானது.
இதைக்கண்ட வானவர் அஞ்சி நடுங்க, திருமாலும் நான்முகனும் அவர்களை கையில் சென்று பரமனிடம் வானவரும் அவ்வாறே செய்ய கயிலை நாதன் தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்து வரச் சொன்னார். யாராலும் அணுக முடியாத அந்த விஷயத்தை சுந்தரன் நாவல் பழம் போல் உருட்டி எடுத்து வர, முக்கண்ணன் அதனை எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில்இட, பரமன் உண்டால் பெரும் கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கைகொண்டு தடுக்க விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கியது.
அது கழுத்து நீல நிறமானது. பெருமானும் நீலகண்டன் ஆனார். இது நடந்தது ஏகாதசி அன்று மாலை பொழுதில். பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர். மறுநாளான துவாதசி திதி என்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகா வரத்தை திரும்ப பெற்றனர். ஆனால் சிவனை மறந்தனர். பிரம்ம தேவர் தேவர்களின் குற்றத்தை உணர்த்த, தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கைலை நாதனை அடைந்து மன்னித்தருள வேண்டினர்.
சிவபெருமானும் மனம் கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷப வாகனத்தின் இரு கொம்புகளுக்கு இடையில் அம்பிகை காணும் திரு நடனம் புரிந்தனர். அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை வணங்கினர். இது நடந்தது திரியோதசி தினத்தின் திதியன்று மாலை வேளையில் இதுவே பிரதோஷ காலம் என வழிபடப்படுகிறது. பிரதோஷம் வேளையாக கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடைபெறுகிறது.
பிரதோஷ பூஜை சிவபெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை. அனைத்து தெய்வங்களும் அந்த நேரத்தில் வழிபடுகின்ற நேரம் சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளின் நடைகள் சாத்தப்பட்டிருக்கும். அல்லது திரையிடப்பட்டிருக்கும். அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு பலன்கள் பல உள்ளன .
சனி மகா பிரதோஷம்.
சனி பிரதோஷம் என்று கூற மாட்டார்கள் சனி மகா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏனென்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடுவது சிறப்பு. ஏழரை சனி அஷ்டம சனி நடப்பவர்கள் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்
ஒரு சனி பிரதோஷம் சென்றால் நூற்றி இருபது வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவஅருள் கிட்டும். கண்டிப்பாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் வருடத்திற்கு வரும் இருபத்தி நான்கு பிரதோஷத்திற்கு போக முடியாத சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் எட்டு பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும். இந்த எட்டு பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும். தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சனி பிரதோஷத்தன்று ரிஷப வாகனத்தில்அம்பாளும் சுவாமியும் பிரகார வலம் வரும் போது கூடவே நாமும் சென்று சிவாய நமஹ என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவபுராணங்கள் பாடல்களை பாடியும் சிவ ஸ்தோத்திரம் கூறியும் சிவபெருமானை வழிபடலாம்.
நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர், பிரதோஷ பூஜைகள் மூலவருக்கு செய்யப்படும். மூலவருக்கு தீபாரதனை முடிந்த பின்னர் நந்தி தேவர் காதுகளில் யாரும் கேட்காத வண்ணம், நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும் தேவர்களின் பெருங்குறைகளையே தீர்த்த நந்தியம் பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம்.
சனி பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கும் நந்தியம் பெருமானுக்கும் ஒரு வில்வயிலையாவது சாத்தி பூஜிக்க வேண்டும் ஒரு வில்வ இலையால் பூஜித்தால் ஒரு கோடி வில்வ இலைகள பூஜித்த பலன் கிடைக்கும். சிவபெருமானுக்கு ஒரு வெண் தாமரையோ அல்லது செந்தாமரையோ கட்டாயம் அணிவிக்க வேண்டும். சனி பிரதோஷத்தன்று இவ்வாறு செய்வதன் மூலம் சனி கிரகத்தால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளும் குறையும். சிவபெருமானின் பரிபூரண அருளும் கிடைக்கும்.