ஒரு சமயம் வீர சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த இராமதாசர் அரண்மனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சமர்த்த இராமதாசரின் தலைமைச் சீடர் உத்தமர் என்பவர், அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக அவரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர், “நானே பறித்துத் தருகிறேன்” என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார்.
அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், “இவர் பெரிய ஞானியாம். கல்லை எடுத்து அடித்துப் பறவையை பரலோகம் அனுப்பிவிட்டாரே!” என்று பலவாறாகப் பேசினார்கள்.
அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் ராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை, ‘ஜன்ஜூட்’ எனும் ராகத்தில் பாடினார். அந்தப் பாடலைப் பாடியபடியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே ஆகாயத்தில் பறந்து சென்றது. சமர்த்த இராமதாசர் இறந்துபோன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது.
ஹிந்துஸ்தானி ராகமான, ‘ஜன்ஜூட்’ என்ற ராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை. கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய, ‘செஞ்சுருட்டி’ என்ற ராகம், பக்தி பாவத்துடன் பாடப்படுமானால் மனோ ரோகங்களைப் போக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் காலகட்டத்தில் மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கு இந்தத் தகவல் தெரிந்தது. அச்சமயம் அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அந்த மன்னன், சமர்த்த இராமதாசரைப் பணிந்து, “என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள்!” என வேண்டினான்.
சமர்த்த இராமதாசரும் ‘இவனை நல்வழிப்படுத்த இஃது ஒரு நல்ல வாய்ப்பு’ என்று எண்ணினார். மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணி நேரம் ‘மால் கவுஞ்ச்’ என்ற ராகத்தில் ராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். பிறகு, அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த இராமதாசர். இதைக் கண்ட முகலாய மன்னன் வெட்கித் தலை குனிந்தான். அதற்கு பிராயச்சித்தமாக ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த இராமதாசரிடம் வேண்டி நின்றான்.
இராமதாசர், “மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும்போது, ‘ராம் ராம்!’ என்று சொல்லிக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டார்.
அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது, ‘ராம்! ராம்!’ எனச் சொல்லிக் கொள்வது வழக்கதில் வந்தது.