பாற்கடலில் மந்திர மலையை மத்தாக வைத்தும் வாசுகி பாம்பை கயிறாக முறுக்கியும் ஒரு பக்கம் தேவர்களும் மறுபக்கம் அசுரர்களும் இழுத்துப் பிடித்து கடையும்போது வெளிப்பட்டவள் மகாலட்சுமி. அழகிய மாலையை அணிந்தவள் திவ்ய மங்கள ரூபம் கொண்டவள் பரிமளம் வீசும் மேனியை உடையவள் தேவர்களும் மூவர்களும் போற்றும் மகாலட்சுமி தேவி. இந்த திருமகளை வணங்குவதால் உண்டாகும் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.
திருமகளின் சிறப்புகள்:
1. திருமகளின் கடாட்சம் மட்டும் இருந்தால் ஒருவன் ஒரே நாளில் குபேரனுக்கு இணையாக செல்வத்துக்கு அதிபதி ஆகிவிடலாம்.
2. மஞ்சள், குங்குமம், திருமண், வெற்றிலை, பூரண கும்பம், மாவிலை தோரணம், பசு, கண்ணாடி,தீபம் போன்ற மங்களப் பொருட்களில் திருமகள் நித்திய வாசம் செய்கிறாள்.
3. வில்வ மரத்தை வலம் செய்தால் திருமகளை வலம் செய்த பலன்களை பெறலாம்.
4. நெல்லிக்கனி இருக்கின்ற இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். அதனால்தான் அந்த காலத்தில் வீடுகளில் நெல்லி மரமும் நெல்லிக்கனி ஊறுகாயும் வைத்துக் கொள்ளப்பட்டன.
5. வில்வ மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதை போலவே துளசி செடியிலும் அவள் விரும்பி உரைகிறாள். ஆகவே துளசி செடியை வீடுகளில் வைத்து வளர்ப்பது எல்லா நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
6. மகாலட்சுமி இரண்டு உருவங்களில் உயிர்களுக்கு அருள் செய்கிறாள். ஒன்று மூதேவி வடிவம். இரண்டாவது பூமாதேவி என்ற நிலமகள் வடிவம்.
7. மகாலட்சுமி வைகுந்தத்தில் ரமாதேவியாகவும் சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமியாகவும் பாதாளத்தில் நாகலட்சுமியாகவும் காட்சி தருகிறாள்.
8. இவள் அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், மிருகங்களிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடத்தில் ப்ரீதி லட்சுமியாகவும், வேதாந்திகளிடத்தில் தயா லட்சுமியாகவும் இருக்கிறாள்.
9. இந்த மகாலட்சுமியே யோக நித்திரை புரிகின்ற திருமாலின் மார்பில் எழுந்தருளி இருப்பதால் யோகலட்சுமி எனப்படுகிறாள். பெருமாளின் இரண்டு பக்கங்களிலும் எழுந்தருளி இருப்பவர்கள் போக லட்சுமி என்றும் தனியாக சந்நிதி கொண்டு சேவை சாதிப்பவள் வீரலட்சுமி என்றும் பெயர் பெறுகின்றனர்.
10. மகாலட்சுமி பலவிதமான நாம ரூபங்களோடு எழுந்தருளி பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருள் பாலிக்கிறாள். உதாரணமாக பாற்கடலில் தோன்றியதால் ஸ்ரீ என்றும், ஜனக மகாராஜனின் மகளாக பிறந்ததால் ஜானகி என்றும், யாகசாலையில் பூமியிலிருந்து கலப்பையின் முனையால் வெளிப்பட்டதால் சீதா என்றும் தாமரை மலரில் வீற்றிருப்பதால் பத்மாசனி என்றும், மாதுளங்கனியில் இருந்து ஆவிர்ப்பதித்ததால் மாதுளங்கி என்றும் பல திருநாமங்களை பெற்று இருக்கிறாள்.
11. மகாலட்சுமியை வழிபடுவதால் குறைவற்ற செல்வம்,நீண்ட ஆயுள் நோயற்ற வாழ்க்கை சகல விதமான வசதிகள் ஆகியவை பெருகும்.