கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் திருநாரையூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார் வஞ்சுளவல்லித் தாயார். இந்தக் கோயிலில் தாயாருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் தாயாரின் பெயரிலேயே இத்தலம் நாச்சியார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் அனைத்தும் தாயாரிடம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தாயாருடைய இடுப்பில் சாவிக்கொத்து தொங்குகிறது. இந்தக் கோவில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாஸனம் செய்யப்பட்ட கோயில் இது. சோழ மன்னன் கோச்செங்கண்ணன் என்பவரால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் இதுவாகும்.
காஞ்சியை ‘அத்திகிரி’ என்றும், திருப்பதியை ‘சேஷகிரி’ என்றும் அழைப்பது போல இந்தத் தலத்தை, ‘சுகந்தகிரி’ என்று அழைக்கிறார்கள். இங்கே ஸ்ரீநிவாஸப் பெருமாளும் வஞ்சுளவல்லித் தாயாரும் தம்பதி சமேதராய் திருமணக் கோலத்தில் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர்.
இந்தக் கோயிலில் கருடாழ்வாருக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவர் உலகப் பிரசித்தி பெற்ற கல் கருடாழ்வார் ஆவார். இக்கோயிலில் ஒரே கல்லால் ஆன கருட பகவானுக்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. பங்குனி மற்றும் மார்கழி மாதம் என்று வருடத்துக்கு இருமுறை கருட சேவை நடைபெறும். உத்ஸவத்தின் முதல் நாள் மாலை கருட பகவான் வெளியே வருவார். சன்னிதியிலிருந்து வெளியே வரும்போது வெறும் 4 பேர் மட்டுமே அவரை சுமப்பார்கள். தொடர்ந்து அவருடைய எடை படிப்படியாக அதிகரித்து 8, 16, 32, 64, 128 பேர் என அவரை சுமப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த கருட சேவை நடைபெறும் சமயத்தில் கல் கருட பகவானின் மேனியில் வியர்வைத் துளிகள் உருவாவதையும் பக்தர்கள் தரிசித்து இருக்கிறார்கள். அதேபோல இந்த ஊர்வலம் முடிந்து மறுநாள் அதிகாலை கோயிலுக்குத் திரும்பும்போது எடை படிப்படியாய் குறைய, 128, 64, 32, 16, 8 என்று கடைசியில் முதலில் சுமந்த 4 பேர்கள் மட்டும் சுமந்து சன்னிதிக்குக் கொண்டு செல்வார்கள். இன்று வரை இந்த அதிசய நிகழ்வுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதிகாலையில் கோயிலுக்குத் திரும்பும் கல் கருட பகவானுக்கு விசேஷ வரவேற்பு அளிக்கப்படும். பெருமாள் கையால் பரிவட்டம், வேட்டி, மாலைகள் அணிவிக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளிநாட்டிலிருந்து கூட இந்த கருட சேவையை தரிசிப்பதற்கெனவே இத்தலத்துக்கு பிரத்யேகமாக வருகை தந்து இந்த கருட சேவையை கண்டு தரிசிக்கிறார்கள். இந்த கல் கருட பகவானை ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.