உலகின் முதல் தங்க சிவலிங்க கோயில்!

தங்க சிவலிங்கம் கோவில்...
தங்க சிவலிங்கம் கோவில்...

லகின் முதல் தங்க சிவலிங்க கோயில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள புவனகிரி மாவட்டத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி என்ற அமைதியான கிராமத்தில் 180 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்ட மாகக் கட்டப்பட்டுள்ளது. ரமணேஸ்வரம்  என அழைக்கப்படும் இக்கோயில் ஒரு இந்து யாத்திரை கோயிலாகும். சித்தகுரு ஸ்ரீ ரமணானந்த மகரிஷி அவர்களால் 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அறக்கட்டளையான சிவசக்தி ஷீரடி சாயி அனுக்கிரக மகாபீடத்தின் கீழ் ரமணேஸ்வரம் தேவஸ்தானம் அமைந்துள்ளது.

இக்கோயிலின் தங்க சிவலிங்கம் உலகின் முதல் மற்றும் முதன்மையான சிவலிங்கமாக கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு (ஷீரடி சாயி பாபா சமாதியடைந்து நூறாவது வருடம்) சித்தகுரு ஸ்ரீ ரமணானந்த மகரிஷி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உலகில் எங்கும் இல்லாத  இந்த தங்க சிவலிங்கம் 3 அடி உயரம் கொண்டது.  இதன் சிறப்பு என்னவென்றால் பக்தர்களே லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். நாங்களும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வணங்கினோம்.

புராணங்களின்படி சிவபெருமான் பிரம்மாவுக்கு சிவ சகஸ்ர நாம ஸ்தோத்திரத்தை அருளினார். இதில் சிவபெருமானின் 10000 நாமங்கள் உள்ளன. பிரம்மதேவன் அதை தண்டி மகரிஷிக்கு தெரிவித்தார், அவர் அதை 1008 பெயர்களாக சுருக்கி மார்க்கண்டேய மகரிஷிக்கு தீட்சை அளித்தார், அவர் அதை உபமன்யு மகரிஷிக்கு தெரிவித்தார், மகரிஷி உபமன்யு அதை ஸ்ரீகிருஷ்ணருக்கு அனுப்பினார் எனக் கூறப்படுகிறது.. சிவ சகஸ்ரநாமத்தின் மகிமையை முழுமையாக வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

சிவ சகஸ்ர நாம ஸ்தோத்திரம் பற்றிய ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு, சித்தகுரு ரமணானந்த மகரிஷி தனது தெய்வீக பார்வையால், இந்த ஸ்தோத்திரத்தின் உள் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டார், இதன் விளைவாக ரமணேஸ்வரத்தில் சிவபெருமானின் 1008 பெயர்களுடன் 1008 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தங்க சிவலிங்கம்
தங்க சிவலிங்கம்

வறண்ட நிலமாக இருந்த இந்த இடம் சித்தகுருவின் அருளால் நீர் பெருக்கெடுத்து தற்போது மரங்களால் சூழப்பட்டு காட்சி தருகிறது. மேலும் இங்கு 27 நட்சத்திரங்களுக்குப் பொருத்தமான மரங்கள் உள்ளன. இந்த கோவிலில் 2000 சிவலிங்கங்கள் மற்றும் பல்வேறு தெய்வ உருவ சிலைகள் உள்ளன, ஒவ்வொன்றும் இந்து ஆன்மீகத்தின் தனித்துவமான அம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றில், சிவபெருமானின் புனித பெயர்களில் இருந்து வடிவமைக்கப்பட்ட 1008 சிவலிங்கங்கள் சிவபெருமானின் தெய்வீக நாமங்களை குறிக்கின்றன. மேலும் மூல பீடம் என்று போற்றப்படும் தச மஹாவித்யா தேவதைகள்,, உலகில் எங்குமில்லாத 7 அடி உயர நவ துர்கா, நவ பைரவர்கள் மற்றும் 9 அடி உயர  ஆதிபராசக்தி சன்னிதான உருவ சிலைகள் வியக்க வைக்கின்றன.

12 ஜோதிர்லிங்கங்களை இங்கே ஒரே இடத்தில் தரிசிக்கலாம், கிராமதேவதா சிலைகளையும், 16 மற்றும் 23 அடி உயரத்தில் நிற்கும் கம்பீரமான ஒற்றைக்கல் பாணலிங்கங்களையும், ஸ்படிக லிங்கத்தையும் காணலாம். இங்குள்ள ஆனந்த தீர்த்தம், ஒரு புனித நீர் குளம்,  இதில் சிறிய மற்றும் பெரிய 232 லிங்கங்கள் பக்தர்களை ஈர்க்கின்றன. 2 அடியிலிருந்து 7 அடி வரை உயரத்திற்கேற்றார் போல் தண்ணீரில் லிங்கங்கள் உள்ளன. இது நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. இங்கும் நட்சத்திரங்களுக்கேற்ற லிங்கங்களைக் காணலாம். ஆண்டு முழுவதும் தண்ணீர் இந்த தீர்த்தத்தில் வற்றாமல் இருக்குமாம். மேலும் பஞ்சபூத லிங்கம் மற்றும் எட்டு உலோகத்திலான சிவலிங்கங்களைக் காணலாம். தனியாக இருக்கும் பெரிய பஞ்சலோக சிவலிங்கத்தை வழிபட்டால் இங்குள்ள அனைத்து லிங்கங்களையும் வழிபட்டதற்கு சமமாம்.

இங்குள்ள தன சிவலிங்கத்தை 100 நாணயங்களால் பக்தர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். பின் அதிலிருந்து எட்டு நாணயங்களை எடுத்துச் சென்று வழிபடுகிறார்கள். தனலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள்  இங்குள்ள மொக்கு சிவலிங்கத்தை வணங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி?
தங்க சிவலிங்கம் கோவில்...

இக்கோயிலில் எங்குமே காணக் கிடைக்காத தெய்வ உருவ சிலைகளான ஸ்வாஹா தேவி மற்றும் ஸ்வதா தேவியைக் காணலாம். மந்திரங்களில் கூறப்படும் ‘ஸ்வாஹா’ என்பது ஸ்வாஹா தேவிக்கு அர்ப்பணிக்கப் படுவது. பித்ரு தேவதைகள் சம்பந்தப் பட்ட தேவி ஸ்வதா தேவி, மேலும் இங்கு சிவபெருமான் காலடியில் வணங்கியவாறு காட்சியளிகிகும் குபேரன் மற்றும் லட்சுமியின் திருவுருவங்கள் உள்ளன.  இங்கு ஷீரடி பாபாவுக்கு தனி கோயில் உள்ளது. மேலும் பாபா கால்களை நீட்டியவாறு பாதங்கள் தெரிய அமர்ந்த நிலையில் உள்ள எங்குமே காண முடியாத உருவச் சிலை அனைவரையும் கவருகிறது.

இக்கோயில் சிவலிங்கங்கள் பல்வேறு வடிவில் காணப்படும் புண்ணிய தலமாகும்.  இங்கு வருகை தரும் பக்தர்கள் நேர்மறையான தெய்வீக உணர்வையும் மற்றும் ஆன்மிக அனுபவங்களையும் பெறுகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையை நல் வழிப்படுத்தி அவர்கள் நம் பாரம்பரிய கலாச்சாரத்தை உணர்ந்து பக்தி மார்க்கத்தில் செல்லும் வகையில் வழி நடத்தி வருகிறார் சத்குரு ரமணானந்த மகரிஷி அவர்கள்.  கோயிலுக்கு சென்ற போது சத்குருவை தரிசிக்கும் பாக்கியத்தை நாங்கள் பெற்றோம்.

ரமணேஸ்வரம் ஹைதராபாதிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. தரிசன நேரம் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com