‘சிவாயநம’ என சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

‘சிவாயநம’ என சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!’

மணிவாசகரின் அருமையான மேற்கூறிய வரிகள் ஈசனின் பெருமையை உரைப்பதாகும். கருணாகர மூர்த்தியாகிய சிவபெருமான் உத்தராயண கால மாசி மாதத்தில், சதுர்த்தசியன்று அருவுருமாக, லிங்கோத்பவ மூர்த்தியாக, லிங்க வடிவில் நள்ளிரவில் அவதரித்த நன்னாளே மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி ஐந்து வகைப்படும். முதலாவது நித்திய சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பட்சத்திலும், சுக்ல பட்சத்திலும் வரும் சதுர்த்தசி இரவுகள். இரண்டாவதாக பிட்ச சிவராத்திரி. தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் சதுர்த்தசி. மூன்றாவதாக மாத சிவராத்திரி. இது மாதத்துக்கு மாதம் வேறுபடும். அதாவது, மாசி - கிருஷ்ணபட்ச சதுர்த்தசி, பங்குனி - சுக்லபட்ச திருதியை, சித்திரை - கிருஷ்ணபட்ச அஷ்டமி, வைகாசி - சுக்லபட்ச அஷ்டமி, ஆனி - சுக்லபட்ச சதுர்த்தி, ஆடி - கிருஷ்ணபட்ச பஞ்சமி, ஆவணி - சுக்லபட்ச அஷ்டமி, புரட்டாசி - சுக்லபட்ச திரயோதசி, ஐப்பசி - சுக்லபட்ச துவாதசி, கார்த்திகை - சுக்லபட்ச சப்தமி, மார்கழி - சுக்லபட்ச சதுர்த்தசி, தை - சுக்லபட்ச திருதியை. நான்காவது யோக சிவராத்திரி. சோம வாரமாகிய திங்கள் கிழமையன்று பகலும், இரவும், 60 நாழிகையும் அமாவாசையும் பொருந்துவது யோக அல்லது வார சிவராத்திரியாகும். ஐந்தாவது மகா சிவராத்திரி. அமாவாசைக்கோ அல்லது பெளர்ணமிக்கோ முந்தைய 14ம் நாள் திதியாக சதுர்த்தசி சிவனுக்கு உரியதென சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால், மறுநாள் அமாவாசை. சுக்லபட்சமானால், மறுநாள் பெளர்ணமி. ஆரம்பத்தையும், முடிவையும் நிறைவு பெறச் செய்யும் பொறுப்பு ஈசனுடையது என்பதையே இது காட்டுகிறது.

சிவராத்திரியில் நான்கு கால (சாமம்) பூஜைகள் இறைவனுக்கு நடத்தப்படுகின்றன. அவை: முதல் காலம் மாலை 6.30 முதல் இரவு 9.30 மணி வரை. இரண்டாம் காலம் இரவு 9.30 முதல் 12.30 மணி வரை. மூன்றாம் காலம் மறுநாள் அதிகாலை 12.30 முதல் 3.30 மணி வரை. நான்காம் காலம் மறுநாள் அதிகாலை 3.30 முதல் 6.00 மணி வரை. முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் குரு தட்சிணா மூர்த்தியையும் மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவ வடிவினையும், நான்காம் காலத்தில் பிறை சூடிய பெருமானையம் (சந்திரசேகர மூர்த்தம்) வழிபட்டு சிறப்பு பூஜைகள் கோயில்களில் செய்யப்படும். வீடுகளில் செய்பவர்களும் பலர் உண்டு.

சிவராத்திரி வழிபாட்டுக்குக் கூறப்படும் காரணங்கள்:

1. பாற்கடலைக் கடைந்த சமயம் தோன்றிய ஆலகால விஷத்தை, சிவன் அருந்தி உலகைக் காத்த நாள்.

2. மகா பிரளயத்துக்குப் பிறகு மறுபடியும் உலகைப் படைக்க பார்வதி தேவி, ஈசனை வேண்டி வழிபட்ட நாள்.

3. முடி, அடிகளைத் தேடிய பிரம்மனும் விஷ்ணுவம் அணுக முடியாத அருள்ஜோதியாக ஈசன் நின்ற நாள்.

4. சிவலிங்கத்தில் ஈசன் பிரசன்னமாகி பக்தர்களுக்கு அருள்புரியும் நாள்.

இப்படிப் பல காரணங்கள் உள்ளன. சிவராத்திரியன்று விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், ‘நமசிவாய’ என்கிற பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறிக் கொண்டிருந்தாலே போதுமானது.

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புனிதமானது வில்வ இலைகள். வில்வ இலைகள் மூன்று கூறுகளைக் கொண்டு திரிசூலக் குறியீடு போலத் தோற்றமளிக்கும். மேலும், இம்மூன்றும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றைக் குறிப்பதால், சிவராத்திரியில் வில்வ இலைகளைக் கொண்டு சிவபெருமானுக்குப் பூஜை செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.

சிவபெருமான் பக்தர்களிடம் எதையும் எதிர்பார்க்காத எளிமைப்பிரியன் ஆவார். ஒரே ஒரு வில்வ இலை அர்ச்சனையில் மகிழ்ச்சி அடைபவர். அன்பு காட்டுவதில் பாரபட்சம் கிடையாது. இதைத்தான் திருமூலர்,

‘சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே’

என்று சிவபெருமானக் குறித்துக் கூறுகிறார்.

‘சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை ஐயனே!’ சிறப்பான சிவராத்திரியில் ஈசனை வணங்கி வழிபடுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com