மூன்றாம் பிறை தரிசன ஆலயம்!

மூன்றாம் பிறை தரிசன ஆலயம்!
Published on

மூன்றாம் பிறை தரிசனத்தை தினசரி காலண்டரிலும், பஞ்சாங்கத்திலும், ‘சந்திரபிறை தரிசனம்’ என்று குறிப்பிட்டிருக்கும். அந்த நாளில் வான வீதியில் சில நிமிடங்களே காட்சி தரும் மூன்றாம் பிறை சந்திர காட்சி மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தனது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை சூடி, சந்திர மௌலீஸ்வரராகக் காட்சி தருகின்றார். இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம், ‘ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம! அல்லது ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி;’ என்று இடைவிடாமல் ஜபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்று தெளிந்த மனநிலையை அடையலாம். மேலும், தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோஹிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும், ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

மூன்றாம் பிறை தரிசனக் காட்சிக்கென பிரத்யேக ஆலயமாகத் திகழ்கிறது திருப்பாற்கடல் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயில் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்து மார்க்கத்தில் 20 கி.மீ. தொலைவில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தில் இரண்டு பெருமாள் ஆலயங்கள் உள்ளதால், அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் என்று கேட்டுச் செல்வது அவசியம். இந்தக் கோயில் உள்ள மூலவரையும் மூன்றாம் பிறை தரிசனத்தையும் ஒரேசேரக் கண்டால் இரு மடங்குப் புண்ணியப் பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.

சமயம் வாய்க்கும்போதோ அல்லது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய சந்திரனுக்குரிய நட்சத்திர நாட்களிலோ மற்றும் மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் இன்று அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் வழிபாடு செய்து குறைகள் நீங்கி வளமும், நலமும் பெறலாம்.

சந்திரன் ஸ்லோகம்:

‘எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி திருவருள் தருவாய்

சந்திரா போற்றி சற்குணப் போற்றி

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி’

என்ற மேற்கூறிய ஸ்லோகத்தை மனதில் தியானித்து, மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டு இப்பிறவிக் கடனைக் கடப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com