செய்வினைகளை விரட்டும் திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி!

செய்வினைகளை விரட்டும் திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி!
Published on

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கொடுக்கப்படும் இலை விபூதி பிரசாதம் விசேஷமானது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது போல, வேறு எந்த கோயிலிலும் இப்படி வழங்குவது இல்லை. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடித்து கடற்கரையில் நின்றார் முருகப்பெருமான். அவரைத் துதித்த வேதங்கள் அனைத்தும், பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின. எனவே, இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன. தவிர, பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரண்டு நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுகின்றன.

பன்னிரு கரங்களைக் கொண்டவர் முருகப்பெருமான். அதுபோலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்துக்கு ஆறு நரம்புகள் என ஈராறு பன்னிரண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம். அதனால் இது, ‘பன்னீர் செல்வம்’ என்றும் பக்தர்களால் வழங்கப்படுகிறது.

அபிநவகுப்தர் என்ற சித்தர், ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் ஆளானார். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர், இறைவனை மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோயிலாகச் சென்று, இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியிடம் வந்து மனமுருக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரைத் தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தன.

அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோயிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தன. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி ஆதிசங்கரர் பாடியுள்ளார். ‘சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்’ என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார். ‘பன்னீரு இலை’ என்ற பெயரே காலப்போக்கில் மருவி, பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருகப் பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும். திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக்கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும். பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி, வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்.

‘சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக்கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக்குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக, இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்ற பின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி அதில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கூலியாட்கள் மெய் சிலிர்த்தனர்’ என்கிறது கோயில் வரலாறு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com