திருமணஞ்சேரி என்பது நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் குத்தாலத்துக்கு சமீபமாக உள்ளது. பலரும் அறிந்த தலம் இது. இதே பெயரில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது ஒரு தலம். இங்கு சுகந்த பரிமலேஸ்வரர் என்ற பெயருடன் தரிசனமளிக்கிறார் பெருமான். இம்மாவட்டத்தில் உள்ள 117 திருக்கோயில்களில் இதுவும் ஒன்று.
இப்பகுதி ஒரு காலத்தில் ‘கோயில்காடு’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் காவிரிபூம்பட்டினத்தில் ஒரு வணிகர் இருந்தார். தீவிர சிவபக்தரான அவருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவனருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் அப்பெண்ணுக்குரிய மணமகன், தன் தங்கை மகன் என்றே கூறிய வணிகர், ஒரு கட்டத்தில் இறந்து விட, அவரது மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்து விடுகிறாள்.
இந்தச் செய்தி கேட்ட வணிகரின் தங்கை மகன் காவிரிபூம்பட்டினம் வந்து தன் மாமன் மகளை அழைத்துக்கொண்டு மதுரை செல்லும்போது இடையே திருமணஞ்சேரியில் தங்கினான். அன்று இரவு அவன் பாம்பு கடித்து இறந்துவிடுகிறான். வணிகரின் மகள் சிவனை வணங்கி, மாமன் மகனை உயிர்பெறச் செய்து, பின் அவனையே திருமணம் செய்து கொள்கிறாள். இதனால் கோயில்காடு, ‘திருமணஞ்சேரி’ ஆனது.
மேலும், மாமன் மகனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தபடியால் திருமணஞ்சேரி கோயிலில் உள்ள தல விருட்சமும், கிணறும் மூத்த மனைவிக்கு மதுரையில் சாட்சி சொன்ன திருவிளையாடல் இக்கோயிலுக்கும் சொல்லப்படுகிறது.
இக்கோயில் மூலவர் ”கந்தபரிமலேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி. மேலும் இக்கோயில் வளாகத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, சுயம்பு விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், மகாலட்சுமி, சூரியன் ஆகியோரை தரிசிக்கிறோம்.
சித்திரை வருடப் பிறப்பின்போது இங்கு தங்கி காலையில் வழிபாடு செய்து இறைவனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது கிடைக்கிறது. திருமணம் தடைப்பட்டவர்கள் இங்கு வந்து சிவனுக்கும் அம்பிகைக்கும் மாலை சூட்டி, அர்ச்சித்து வழிபடவேண்டும். அர்ச்சகர் தரும் மாலையை அணிந்து கோயிலை வலம் வர வேண்டும். பிறகு, அந்த மாலையை வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும். திருமணம் நடந்ததும் தம்பதி சமேதராக இங்கு வந்து பழைய மாலையை கோயிலில் சேர்த்து விட்டு, புதிதாக மாலை கட்டி பெருமானையும் தேவியையும் வழிபட வேண்டும். இதேபோன்று குழந்தைச் செல்வமில்லா தம்பதிகள் இங்கு வந்து தொட்டில் கட்டி பரிகாரம் செய்து வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
இக்கோயிலைச் சுற்றி உள்ள கிராமங்களில் வாழும் யாருக்கும் விஷ ஜந்துக்களினால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதற்கு உதாரணமாக, இக்கோயிலில் உள்ள வழிபாட்டுக்குரிய சங்கை ஊதினால் அந்தச் சங்கொலி எதுவரை கேட்கிறதோ அதுவரை விஷக்கடி பாதிப்பில்லை என்கிறார்கள்.