மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே திருமயிலாடி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இத்தலத்தில் பார்வதி தேவி சிவபெருமானுக்கு அழகிய மயில் வடிவில் காட்சி தந்தபோது, சிவபெருமானும் அழகிய கோலத்தில் காட்சி கொடுத்ததால் இந்தத் தலத்துக்கு திருமயிலாடி என்ற பெயரும், சிவபெருமானுக்கு 'சுந்தரேஸ்வரர்' என்ற திருநாமமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தலத்தில் எங்கும் காணாத கோலமாக வடிவேல் குமரன் வடக்கு நோக்கியபடி நிஷ்டையில் தனியாக அமர்ந்து காட்சி தருகிறார். மேலும், இந்த ஆலய பிராகாரத்தில் படைப்புக் கடவுள் பிரம்ம தேவர் அழகுறக் காட்சி தருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு போன்ற தினங்களில் வந்து வழிபாடு செய்து பலன் அடைகின்றனர். பலவித தோஷங்களைப் போக்கும் ஆலயமாக இது விளங்குகின்றது.
எண் கோணத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் காசி விஸ்வநாதருக்குத் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதில் காசி விஸ்வநாதருக்கு அருகிலேயே சனி பகவான் அமர்ந்து அருள்புரிவது விசேஷம்.
இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனை வழிபட்டால் சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனியால் அவதிப்படுபவர்கள் தங்களது தோஷத்திலிருந்து விடுபடுவர். அதோடு. திருமணத் தடை, கல்வித் தடை போன்றவை நீங்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இத்தல ஈசனையும் பிரம்ம தேவரையும் சனி பகவானையும் வழிபட்டுப் பலன் அடைகின்றனர்.