

108 திவ்ய தேசங்களில் மயிலாடுதுறை மாவட்டம் திரு வண்புருஷோத்தமன் கோவில் 30வது திவ்யதேசமாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தைத் தடுத்திட நிறுத்தி அவரை சாந்தப்படுத்த, திருமால் 11 ரூபங்களில் தோன்றினார். சாந்தமடைந்த ஈசன், தான் 11 ரூபங்களில் கோவில் கொள்ள உள்ள திருவாங்கூரில், பெருமாளும் 11 ரூபங்களில் கோவில் கொள்ளுமாறு கேட்க, அதை ஏற்று பெருமாள் கோவில் (Perumal temple) கொண்டார். இது திருநாங்கூர் திருப்பதி என்று போற்றப்படுகிறது.
வண்புருஷோத்தமர் கிழக்கு நோக்கி அருள்கிறார். தாயார் புருஷோத்தமநாயகி; தலவிருட்சம் பலா மரம், வாழை மரம்; தீர்த்தம் திருப்பாற்கடல் தீர்த்தம். விமானம் சஞ்சீவி விக்ரக விமானம். உத்சவபெருமாளன் திருவுருவம் அழகானது. இங்கு தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் கருடசேவை விசேஷம். திருமாமணிக்கூடம், திரு அரிமேய விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருவண்புருஷேத்தமர் இவை நான்கும் ஒரு தெருவின் பக்கமாக அமைந்துள்ளது. இக்கோவில் பெருமாள் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
தலவரலாறு:
வியாக்ரபாதர் என்ற முனிவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. வண்புருஷோத்தமரிடம் வேண்ட, உபமன்யு என்ற ஆண்மகன் பிறந்தது. பெருமாளுக்கு நந்தவனத்தில் பூப்பறித்து மாலையாக தொடுத்து சாற்றி வந்தார் வியாக்ரபாதர். ஒருநாள் அவர் மகன் நந்தவனம் வர பிடிவாதம் பிடிக்க, அவனையும் அழைத்துச் சென்றார்.
அவனை நந்தவனவாசலில் அமரவைத்து உள்ளே சென்றார் வியாக்ரபாதர். வெகுநேரம் ஆனதால் குழந்தை பசியால் துடித்தது; அழுதது. புருஷோத்தமனும் ஓடோடி வந்து திருப்பாற்கடலை தோற்றுவித்து அதில் இருந்து பாலை எடுத்து குழந்தைக்குத் தந்தார்.
இங்கு மூலவர் கிழக்கில் சீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். நாயகி தெற்கு மூலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவர் மேல் சஞ்சீவ விக்ரக விமானம் உள்ளது. இங்கு பெருமாளை ராமனாக கருதி வழிபடுகின்றனர். இந்த தீர்த்தத்தில் பாசி படிவதில்லை. இத்தல பூ செண்பகப்பூ. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இங்கு மட்டுமே பெருமாள் புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.
இக்கோவில் தமிழ் கட்டட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று நிலை விமானங்கள் உள்ளன. பெருமாள் சன்னதிக்கு நேரே கருடன் சன்னதி உள்ளது.
கோவில் சிறப்புகள்:
சைவ சமயத்தில் ஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி ஞானப் பாலை விட்டாள். அதேபோல் பசியால் அழுத வியாக்ரபாதர் மகனுக்கு பாற்கடலையே உருவாக்கி அமுது படைத்திருக்கிறார் இறைவன்.
இத்தலத்தில் 3 ஆஞ்சனேயர்கள் உள்ளனர். ராமபிரான் சன்னதியில் அனுமன் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார்.
மணவாள மாமுனிகள் இத்தலத்தில் இரண்டு வருடம் சேவை செய்திருக்கிறார். குமேதஸ் என்ற படிப்பறிவில்லாதவரை இத்தலபெருமாள் சிறந்த பண்டிதராக ஆக்கினார். திருமங்கை ஆழ்வார் இத்தலம் குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். இத்தலத்தில் தொடர்ந்து 48 நாட்கள் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால், எப்படிப்பட்ட பிரச்னையையும் பெருமாள் தீர்த்து வைப்பார். அயோத்தி ராமனே இங்கு பதினோரில் ஒருவராக புருஷோத்தமன் ஆக உள்ளார்.
வறுமை நீங்கி கல்வி அறிவு சிறக்க, திருமணத்தடை நீங்க, குழந்தைகளின் எதிர்காலம் சிறப்படைய பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். இளம் வயதில் பெற்றோரை இழந்தவர்களுக்கு புருஷோத்தமன் அடைக்கலம் தருவார். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.