தோஷம் தீர்க்கும் திருத்தல தெய்வங்கள்!

தோஷம் தீர்க்கும் திருத்தல தெய்வங்கள்!

சூரியன் மற்றும் அனந்தபத்மநாபன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்துக்கு அருகில் உள்ள ஞாயிறு எனும் தலத்தில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால், சூரிய கிரக தோஷங்கள் பகலவனைக் கண்ட பனி போல் விலகும்.

திருவையாறு - கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்கினால் சந்திர கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் தன்னொளி வீசுகிறது.

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திர ரத வல்லப பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் த்ரிபங்க நிலையில் அருளும் துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கி விடும்.

திருவிளையாடல்கள் அறுபத்திநான்கினை சிவபெருமான் நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமானை தரிசித்தால் புதன் கிரக தோஷங்கள் விலகியோடி பொன்னான வாழ்வு கிட்டும்.

சென்னை, மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னிதி கொண்டு அருளும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி, சூன்ய தோஷங்கள் விலகியோடுகின்றன.

ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால், சுக்ர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்த சுவாமியை மனமுருக வேண்டி வழிபட்டால் கேது கிரக தோஷங்கள் மறையும்.

காஞ்சிபுரம் - வேலூர் பாதையில் தனிக்கோயில் கொண்டருளும் பள்ளூர் வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்தோடும்.

ஸ்ரீ அனந்தவல்லியம்மன்
ஸ்ரீ அனந்தவல்லியம்மன்

சென்னை, கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்த வல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகா யந்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சம் கனிகளை வைத்து வணங்க, திருமண தோஷங்கள் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்துகொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

சென்னை, தாம்பரம் அருகே படப்பை - காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதி நித்யா தேவியர் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இவர்களை தரிசிக்க, அனைத்து வித தோஷங்களும் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும், முல்லைவனநாதரும் கர்ப்பத் தடை தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.

சென்னை, ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர, தரித்திர தோஷம் தொலைந்து, வளமான வாழ்வு கிட்டுகிறது.

திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் பெரமண்டூரில் உள்ள அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, தோஷங்கள் தொலைகின்றன.

ராமநாதபுரம், தேவிப்பட்டணத்தில் ஸ்ரீராமபிரானால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல் நடுவே அருளும் நவக்கிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் போக்கியருளும் சக்தி படைத்தவர்கள்.

ஸ்ரீ வீரராகவப் பெருமாள்
ஸ்ரீ வீரராகவப் பெருமாள்

நீத்தார் கடன் செய்ய மறந்தவர்கள் அல்லது தவறியவர்கள் காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும், திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாளையும் தரிசித்தால், அந்த தோஷங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

ஈரோடு, திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னி மரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.

திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com