திருச்செங்கோடு வைகாசி விசாக விழா சிறப்புகள்!

திருச்செங்கோடு வைகாசி விசாக விழா சிறப்புகள்!

- தென்றல் நிலவன்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரருக்கு பிரம்மோத்ஸவமாக வைகாசி விசாக விழா கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலருக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. கொடி ஏறிய தினத்தில்,இருந்து 3 நாட்கள் மேலே உள்ள உள்ள மண்டபங்களில் மண்டபக் கட்டளைகள் சிறப்பாக நடத்தப்படும்.

​நான்காம் நாள் பூரம் நட்சத்திர தினத்தில் ஆதிகேசவப்பெருமாளுக்கு கொடியேற்றம் நடைபெற்று அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப்பெருமாள் உற்சவ மூர்த்திகள் படிக்கட்டுகள் வழியாக எடுத்து வரப்பட்டு வழியில் உள்ள மண்டபங்களில் மண்டபக் கட்டளைகள் நடைபெறும் . அன்று இரவு சுமார் 10 மணி அளவில் கீழே கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள செங்கோட்டுவேலவர் சுவாமி அடிவாரம் சென்று சுவாமிகளை எதிர்கொண்டு அழைத்து வருவார். அன்று அதிகாலை 4 மணிவரை மூன்று சுவாமிகளும் நான்கு ரத வீதிகளிலும் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

​ஐந்தாம் திருவிழா முதல் எட்டாம் திருவிழா முடிய சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் மண்டபக் கட்டளைகள் நடைபெறும் 9ம் திருவிழா ஆகிய விசாக நட்சத்திர தினத்தில் காலை அர்த்தநாரீஸ்வரருக்கு கீழே கைலாசநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று விநாயகர், செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய ஸ்வாமிகள் அவர்களின் தேரில் வைக்கப்பட்டு, விநாயகர், செங்கோட்டுவேலவர் தேர்கள் நான்குரத வீதிகளிலும் இழுத்து வரப்படும்.

​அர்த்தநாரீஸ்வரர் தேர் 400 ஆண்டுகளுக்குமேல் பழமையான தமிழகத்தில் நான்காவது பெரிய தேர் ஆகும்.​மறுநாள் பத்தாம் திருவிழா காலை அர்த்தநாரீஸ்வரர் தேர் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பல்லாயிரகணக்கான பக்தர்களால் இழுக்கப்படும். அர்த்தநாரீஸ்வரர் தேர் நான்குரத வீதிகளில் வலம் வந்து நிலை சேர 10, 11 மற்றும் 12 ம் நாட்கள் ஆகிய 3 நாட்கள் ஆகும் . அர்த்தநாரீஸ்வரர் தேர் நிலை சேர்ந்த பிறகு ஆதிகேசவப் பெருமாள் தேர் இழுக்கப்படும்.

பின்னர் பதினான்காம் நாள் அதிகாலையில் அடிவாரத்தில் செங்கோட்டு வேலவரிடம் விடைபெற்று அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகள் படிகள் வழியாகவே மீண்டும் மலைக்கு எடுத்து செல்லப் படுகிறார்கள். அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் கூட்டு முயற்சியாக இவ்விழாவினை சிறப்புற நடத்திக் வருகிறார்கள்.

​மலைக்கு படி வழியாக செல்லும் போது 10 நிமிடம் ஏறியதும் மலைப்பாதையில் செதுக்கப்பட்ட 60 அடி நீளமுள்ள ஐந்துதலை நாகர் உள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதம் நாக பஞ்சமி தினத்தில் இங்கு சிறப்பான வழிபாடு நடைபெறும்.

​மலைமீது ராஜகோபுரத்தில் இருந்து கிழக்கே அரைமணி நேரம் பாறைகள் வழியாக நடந்தால் அங்கு பாண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள பாறை ஒன்று மலடிக்கல் என்று வழங்கப்படும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அர்த்தநாரீஸ்வரருக்கு விரதம் இருந்து இங்கு வந்து பாண்டீஸ்வரரை தரிசித்து இந்த மலடிக்கல்லை வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com