சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்!

சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்!
Published on

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி தெருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு பத்மாவதி தாயார் திருக்கோயில். இக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று காலை ஏராளமான பக்தர்களின் பக்திப் பரவச தரிசத்தோடு கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று காலை திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இன்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாரை தரிசனம் செய்யலாம் என கோயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவு வரை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் பக்தர்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் திருப்பதி லட்டுகளும் வழங்கப்படுகின்றன. திருமலை திருப்பதி கோயிலை போன்றே அனைத்து பூஜைகளும் இக்கோயிலில் தினசரி நடைபெறும்.

இந்த இடம் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினரால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாகும். இங்குதான் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடித்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் அருள்மிகு பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் அனைத்தும் திருப்பதியில் வடிக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. மூலவர் அருள்மிகு பத்மாவதி தாயார் சிலை முன்னதாக மூன்று நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும் வாசம் செய்விக்கப்பட்டு இரண்டாயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை நான்கரை அடி உயரம், மூன்றரை அடி அகலமும் கொண்ட அருள்மிகு பத்மாவதி தாயார் சிலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ பத்மாவதி தாயார் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருப்பதி கோயில் ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.

கும்பாபிஷேகத் திருநாளான இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை தாயாருக்கு சதுசதனா அர்ச்சனை நடைபெற்றது. இதனையடுத்து மீன லக்னத்தில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு மாநிலங்களில் சீனிவாச பெருமாள் கோயிலைக் கட்டி உள்ளது. ஆனால், முதன் முறையாக ஆந்திர மாநிலத்தை விட்டு, தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக சென்னையில் அருள்மிகு பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயிலைக் கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மா ரெட்டி, “சென்னையில் மிக விரைவில் வெங்கடேஸ்வரா கடவுளுக்கு நிரந்தரக் கோயில் ஒன்றைக் கட்ட உள்ளோம். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் உள்ளது போன்றே இந்தக் கோயில் அமைக்கப்படும். புதிய வெங்கடேஸ்வரா கோயில் அமைப்பதற்கான நிலங்கள் வாங்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com