திருப்பதியில் ஒரு டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வலம் வந்த ஏழுமலையானை பக்தர்கள் கண்குளிர தரிசித்தனர்.
திருப்பதியில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழக்கம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலம் என்றும் கூறப்படுகிறது. தட்சிணாயண புண்ணிய காலம் இந்த முறை கடக லக்னத்தில் பிறக்கிறது.
ஆனிவார ஆஸ்தானத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பழைய வரவு-செலவு கணக்கை முடித்து, புதிய வரவு-செலவு கணக்கு தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் ஹத்திராம்ஜி மடத்தின் மவுந்துகளிடம் கோவில் நிர்வாகம் இருந்தது. அவர்களிடம் இருந்து அனைத்து வரவு-செலவு கணக்குகள், இருப்புகள் மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற அமைப்பை உருவாக்கி பெற்றுக் கொண்ட நாளாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி வார ஆஸ்தான தினமான நேற்று, பழைய வரவு செலவு கணக்குகளை முடித்து, புதிய கணக்குகள் துவங்கப்பட்டது. இதனையொட்டி சாமிக்கு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெற்றது.
இதற்காக, ஒரு டன் அளவில் பல்வேறு வகையான மலர்களால், தேவஸ்தான தோட்டத்துறையினர் புஷ்ப பல்லக்கை தயார் செய்திருந்தனர். கோயிலில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புறப்பட்ட மலையப்ப சாமி, வாகன மண்டபத்தை அடைந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.