திருமண தடை போக்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்!

Thiruvallangadu
Thiruvallangadu

ஆலயங்களின் சிறப்பே இந்தியாவின் தெற்குப் பகுதியில் தான். அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில், கோபுரங்களும், சிற்பங்களும் நிறைந்த ஆலயங்களும், அவைகளின் புராண வரலாறும் சிறப்பானவையாகும்.

சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில், திருவாலங்காடு 'ரத்ன சபை'யும் ஒன்று. இத்தலம், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார் மற்றும் அருணகிரிநாதராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும். தேவாரம், திருப்புகழ் போன்றவற்றில் பாடப்பட்ட இத்தலம், தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

இங்கே மூலவராக வட ஆரண்யேஸ்வரர் அருள் பாலிக்கிறார். தாயார் வண்டார்குழலி ஈசனுடன் சேர்ந்து அருளை வழங்குகிறார். உற்சவ மூர்த்திகளாக, ஸ்ரீ ரத்னசபாபதீஸ்வரரும், தாயார் சமீசீனாம்பிகையும் இருக்கிறார்கள்.

சிவபெருமான் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இறைவனால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட, 'காரைக்காலம்மையார்', சிவனைத் தரிசிக்க வேண்டித் தலையால் நடந்து வந்து, நடராஜனின் திருவடியில் சேர்ந்து, அவனருளால் ஆனந்தத்தை அனுபவித்தார் என்கிறது புராணம். இந்த ஆலமரக்காட்டில், சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றி, நடனம் ஆடியதால், இத்தலம் திருவா(ஆ)லங்காடு என அழக்கப்படுகிறது. இறைவன் வட ஆரண்யேசுவரர் என்ற பெயரும் பெற்றார்.

முன்னாளில் இந்த ஆலமரக்காட்டில், 'சும்பன், 'நிசும்பன்' எனும் இரு அரக்கர்கள், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் துன்புற்றவர்கள் சிவனையும் பார்வதியையும் நாடினார்கள். சக்தி தேவி தன் பார்வையால் 'காளியை'த் தோற்றுவித்து, அவள் மூலம் அசுரர்களை அழித்து, அவளையே ஆலங்காட்டிற்குத் தலைவியாக்கினாள். ஆனால் அரக்கர்களை அழித்து, ரத்தத்தைக்குடித்த காளி, ஆலங்காட்டில் பல கோர செயல்களைப் புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுக் கோளுக்கிணங்க, சிவபெருமான் கோரவடிவம் கொண்டு, ஆலங்காட்டினை அடைந்தார்.

அங்கிருந்த காளி, இறைவனிடம், "என்னுடன் நடனமாடி வெற்றி பெற்றால், இந்த ஆலங்காட்டை ஆளலாம்", என்றாள். சிவனும் காளியோடு, ஊர்த்தவ தாண்டவம் ஆடினார். அப்போது காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின்னர் தனது கால் பெருவிரலால் அம்மணியை எடுத்துத் தன் காதில் பொருத்தினார்.

இதனைக் கண்ட காளி, ' என்னால் இப்படி நடனமாட முடியாது', எனத் தோல்வியை ஒப்புக் கொண்டாள். சிவன் அவள் முன் பிரசன்னமாகி, 'நீதான் எனக்கு சமமானவள், உனையன்றி வேறு யாருமில்லை' என்று கூறினார். மேலும் 'இத்தலத்திற்கு வருபவர்கள், முதலில் உன்னை வணங்கி விட்டு, என்னை வணங்கினால்தான் முழு பலனும் கிடைக்கும்' என அருள்பாலித்தார். உடனே காளி சிவபெருமானின் அருளின்படி, அங்கேயே கோயில் கொண்டு, பக்தர்களை காத்து ரட்சிக்கிறாள். எனவே இத்தலம் ' சக்திபீடம்' எனவும் அழைக்கப்படுகிறது.

மார்கழி திருவாதிரை மூன்று நாட்களும், பங்குனி உத்ரம் பத்து தினங்களும், இங்கு திருவிழாக்காலங்களாகும். சிவனின் எல்லா விசேஷ நாட்களிலும், இங்கு அபிஷேகம், அர்ச்சனை நடப்பது சிறப்பாகும். 'ஆருத்திரா தரிசனத்' திருவிழா இங்கு பிரசித்தம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனின் அருள் பெற வேண்டி இங்கே குவிவார்கள். நடனத்தில் சிறப்பாகத்தேர்ச்சியுறவும், கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தவும் வேண்டி இங்கு வருவார்கள்.

காரைக்காலம்மையார் அருளிய மூத்தத் திருப்பதிகம் பெற்ற சிறப்பானத்தலம். தாமரை விரித்தாற் போல அமைந்து, அதன் மீது அமைந்துள்ள 'கமலத்தேர்' தனிசிறப்பு. தலவிருட்சம் ஆலமரமாகும். இத்தலத்தில் பெரிய குளம் உள்ளது. இதற்கு 'முக்தி தீர்த்தம்' என்று பெயர்.

வருக! இறையனார் அருள் பெறுக!

ஓம் நமசிவாய!

கோயில் நடை திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

இத்தலத்திற்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் மூலம் வந்து, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டால், அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம், கோயிலை அடையலாம். திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும், திருவாலங்காடு வழியே செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com