இன்று திருவாரூர் திருக்கோயில் தெப்பத் திருவிழா!

இன்று திருவாரூர் திருக்கோயில் தெப்பத் திருவிழா!

திருவாரூர் என்றாலே அனைவரின் ஞாபகத்துக்கும் வருவது மிகப்பெரிய ஆழித்தேர்தான். திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்கத் தலங்களில் முதன்மையாகவும் விளங்குகிறது. உலகப் பிரசித்திப் பெற்ற தியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேரோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தைத் தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். 500 பேர் வரை பயணிக்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தெப்பத் திருவிழா இதுதான். 432 பேரல்கள், இரண்டு அடுக்குகளாக வைத்து 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகை போல இந்தத் தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரம்மாண்டம் தான். அசைந்தாடும் ஆழித்தேர், பரந்து விரிந்த கமலாலய குளம், செங்கழுநீர் ஓடை, விஸ்தாரமான ஆரூர் ஆலயம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலவே திருவாரூர் தெப்பத் திருவிழாவும் பிரம்மாண்ட வடிவில் உலா வருவதே அந்த ஊரின் பெருமையாகும். தியாகராஜர் கோயிலின் எதிரே உள்ள கமலாலயம் என்னும் பெயர் கொண்ட குளத்தில் இந்தத் தெப்பத் திருவிழா நடைபெறும். குளமே ஆலயமாகப் போற்றப்படும் இந்த கமலாலய குளம் மகாலட்சுமி தவம் புரிந்து இடமாகக் கருதப்படுகிறது. இந்தக் குளத்தில் நீராடினால் 12 மகாமகத்தில் நீராடிய புண்ணியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சித்தர்களும் இந்திரன் போன்ற தேவர்களும் தசரதன் அரிச்சந்திரன் போன்ற மன்னர்களும் ரிஷிகளும் இந்த திருக்குளத்தில் நீராடியதாக கூறப்படுகிறது.

இந்தத் திருக்குளம் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு நிகரான ஐந்து வேலி பரப்பளவு கொண்டதாகும். தமிழகத்திலேயே மிகப்பெரிய தெப்பம் இந்த திருவாரூர் தியாகராஜர் தெப்பம்தான். தமிழகத்தில் எந்த ஒரு தெப்பத்திலும் மக்களை ஏற்றும் நடைமுறை கிடையாது ஆனால், திருவாரூர் தெப்பத்தில் மட்டும்தான் மக்களை ஏற்றும் நடைமுறை உள்ளது. அந்த அளவுக்கு பரப்பளவில் மிகப்பெரியதாக இருக்கும் இந்தத் தெப்பம். தெப்பத் திருவிழாவின்போது சுமார் 500 பேர் வரை தெப்பத்தின் மீது அமர்ந்து பயணிப்பார்கள். இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபடுவார்கள். 10 டன் எடை தாங்கக்கூடிய அளவிலான பாரல்கள் இந்தத் தெப்பத்தில் பொருத்தப்பட்டுள்ளன. தியாகராஜர் திருக்கோயில் வடிவில் இந்தத் தெப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜர், கமலாம்பாள், நீலோற்பலாம்பாள், விநாயகர், முருகன் ஆகிய கடவுளின் திருவுருவங்களுடன் தெப்பத்தின் மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருத்தெப்பத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

இந்தத் தெப்பத் திருவிழா இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். தெப்பத் திருவிழாவின் முதல் நாளன்று இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை வந்தடைவர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளி, விடிய விடிய தெப்பத் திருவிழா நடைபெறும். இந்தத் தெப்பம் திருக்குளத்தை மூன்று முறை சுற்றி வரும். ஒரு முறை தெப்பம் சுற்றி வர மூன்று மணி நேரம் ஆகும். இந்தத் தெப்பத் திருவிழாவைக் காண பல ஊர்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com