நாளை ஆனி அமாவாசை!

நாளை ஆனி அமாவாசை!

னி அமாவாசை முழு நாளும் சர்வ அமாவாசையாகக் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பன்னிரண்டு ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு தர்ப்பணம் செய்வதால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் விலகி விடும் என்பது நம்பிக்கை. சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது அந்த வகையில் ஆனி மாத அமாவாசை நாளை (17.06.2023) சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகு காலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்குப் பொருந்தாது மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம் மூன்று தலைமுறைகளின் பெயர்களை அறிந்து சொல்வது அவசியம். தர்ப்பணம் செய்த பிறகு வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சாத்த வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்கு பிடித்த இனிப்பு, கார, பழ வகைகளை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். தலைவாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். இன்று கோதுமை தவுடு அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான். இந்த இரண்டுமே மிக உயர்ந்த சக்தி கொண்டவை. எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகம்.

தர்ப்பைப் புல் ஆகாயத்தில் இருந்து தோன்றிய தாவரமாகும். இதன் சக்தியையும் சிறப்பையும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் மேலை நாட்டவர்கள் உணர்ந்தார்கள். ஆனால், தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தர்ப்பைப் புல்லுக்கு பூஜைகளில் முதன்மை இடம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். தர்ப்பைப் புல்லின் இரு பக்கங்களில் பிரம்மாவும் சிவனும் இருக்க, நடுவில் மகாவிஷ்ணு உள்ளனர். இதனால் தர்ப்பைப் புல்லுக்கு மந்திர சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகமாகும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது கண்களுக்குத் தெரியாத ஒளி வடிவில் வரும் மூதாதையர்கள் தர்பைப் புல்கள் மீதுதான் அமர்வார்களாம். எனவேதான் தர்ப்பைப் புல்லை தொடும்போது மட்டும் மானசீகமாக முன்னோர்களை வணங்கி விட்டே தொட வேண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, பித்ருக்களுக்குக் கொடுக்கும் நீர் தர்ப்பணங்கள் அவர்களுக்கு நேரடியாகச் சென்று சேரவும் தர்ப்பை புல்லே உதவியாக உள்ளது.

ஆனி மாதம் இறை வழிபாட்டுக்கு சிறப்பான மாதமாகும். இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுப விஷயங்கள் பெருகும். தாமதமாகும் திருமணம் விரைவில் நடக்கும். வீண் பண விரயங்கள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பதை நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com