தஞ்சையில் நாளை 24 கருட சேவை!

தஞ்சையில் நாளை 24 கருட சேவை!

Published on

ஞ்சாவூர் மற்றும் அவ்வூரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் இருக்கின்றன. அனைத்துக் கோயில்களிலிருந்து ஒரே இடத்தில் உத்ஸவப் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருடந்தோறும் வைகாசி திருவோண நட்சத்திர நாளில் விமரிசையாக நடைபெறும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

தஞ்சை பகுதியிலுள்ள அழகிய வனம் ஒன்றில் பராசர மகரிஷி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். தேவலோகத்தில் இருந்து தனக்குக் கிடைத்த அமிர்தத்தை, அந்த வனத்திலிருந்த திருக்குளமொன்றில் ஊற்ற, அக்குளம் புனிதமடைந்தது. மேலும் அக்குளம், ‘விஷ்ணு அமிர்த புஷ்கரணி’ என்ற பெயரையும் பெற்றது.

ஒரு சமயம் இவ்வனப் பகுதியில் திடீரென பஞ்சம் நிலவியபோது, தஞ்சகாசுரன் என்கிற அரக்கன், மகரிஷியைத் துன்புறுத்தினான். அதையடுத்து பராசரர் மகரிஷி, மகாவிஷ்ணுவை வேண்ட, அச்சமயம் நரசிம்ம உருவெடுத்திருந்த திருமால், அசுரனை வதைத்து, மகரிஷி மற்றும் மக்களைக் காத்து ரட்சித்தார். மேலும், மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்கி, நீலமேகப் பெருமாள் எனும் திருநாமத்துடன் திருமால், அங்கே கோயில் கொண்டார் எனக் கூறுகிறது தல புராணம். தவிர, பராசரரின் வேண்டுதலை ஏற்று, வைகாசி திருவோண நன்னாளில் மகாலட்சுமி சகிதம் கருட வாகனத்தில் திருக்காட்சி அளித்தார். எனவே, கருட சேவை விழா இங்கு மிகவும் பிரசித்தம். அதிகாலையிலேயே 24 கோயில்களில் உள்ள உத்ஸவப் பெருமாள்கள் வெண்ணாற்கரையிலிருந்து கிளம்பி, கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

இத்தலம், ‘வராகத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

வராக பெருமானிடம் பகை கொண்டு போர் புரிந்து அழிந்த அசுரன் இரண்யாட்சன் மகள் ஜல்லிகை என்பவள் பெருமானிடம் பேரன்பு கொண்டு, தவமிருந்து அவரின் திருவருள் பெற்றாள். ஸ்வேதா, சுக்லா என்கிற இரண்டு பெண்களும், தண்டகாசுரன் என்ற ஆண் மகனும் ஜல்லிகைக்குப் பிறந்தனர். இரு பெண்களும் பெருமாளிடம் பக்தியோடு இருக்க, தண்டகாசுரன் கோபம் கொண்டு பெருமாளை பழிவாங்க எண்ணினான். யார் எடுத்துக் கூறியும் கேட்காமல் கடுந்தவம் செய்து பல வரங்களைப் பெற்று, தாத்தாவைப் போலவே முனிவர்களுக்கு கொடுமைகள் செய்ய ஆரம்பித்தான். முனிவர்கள் பெருமாளிடம் முறையிட, எம்பெருமான் ‘வராகத் திருமேனியோடு’ காட்சி தந்து தண்டகாசுரனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்தார். இருந்தபோதிலும் அவன் கடவுளிடம் பக்தி கொண்டிருந்த காரணத்தால், தண்டகாசுரனுக்கு பரமபதம் அளித்து அருளினார்.

இந்த வருடம் 9.6.2023, அதாவது நாளை வெள்ளியன்று வரும் வைகாசி திருவோண நட்சத்திர தினம், தஞ்சை மாநகரம் ‘ஜே ஜே’ என்று இருக்கும். இன்று நடைபெறும் கருட சேவை பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை, வீதியுலா வைபவங்கள் நடைபெறும். இந்த கருட சேவையை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்குமென ஐதீகம். தஞ்சையில் 1934ம் ஆண்டு முதல் இந்த கருட சேவை வைபவம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ருட சேவை என்பது வைணவத் தலங்களில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஒரு நிகழ்வாகும். இதற்கு ஒரு தொன்மக் கதை கூறப்படுகிறது.

சீனிவாசப் பெருமாளாக திருமால் திருப்பதியில் இருக்கையில், தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் வீற்றிருக்க ஆசைப்பட்டார். இதை அறிந்த கருடன், வைகுண்டத்திலுள்ள, ஏழு மலைகளையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்க்க, தான் ஆசைப்பட்டதை நிறைவேற்றிய கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார் திருமால்.

காஞ்சி மாநகரில் வருடத்தில் மூன்று முறை கருட சேவையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை தரிசனமும், கும்பகோணத்தில் 12 கருட சேவை தரிசனமும் விமரிசையாக நடைபெறுகின்றன. வெவ்வேறு மாதங்களில் மேற்கூறிய கருட சேவை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கருட வாகனப் பெருமாள் தரிசனம் காண்போம்; கஷ்டங்கள் நீங்கி களிப்போடு வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com