பயணக் கட்டுரை - கிரிஷ்னேஷ்வர் கோவில் அவுரங்காபாத்!

கிரிஷ்னேஷ்வர் கோவில் ...
கிரிஷ்னேஷ்வர் கோவில் ...
Published on

ருமையான கோவில். ஆனந்தம் பொங்க தரிசனம் செய்தோம். இங்கு ஆரத்தி மிகவும் விசேஷம். பெரிய கோவில். நிறைய சன்னதிகள். வெளியில் வரவே மனம் வரவில்லை.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வெருல் கிராமத்தில் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கிரிஷ்னேஷ்வர் கோவில் உள்ளது. அவுரங்காபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் எல்லோரா குகையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது இக்கோவில்.

எல்லோரா குகைகளிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கோவில் 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தான்களால் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சத்ரபதி சிவாஜியின் தாத்தா மாலோஜி போசலேயால் 16ஆம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. இக்கோவில் பலமுறை தாக்கப்பட்டு பின்னர் புனரமைக்கப்பட்டு தற்போதைய வடிவ கோவில் 18 ஆம் நூற்றாண்டில் அகல்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது.

கிருஷ்னேஷ்வர் கோவில் 44000 சதுர அடி பரப்பளவில் கருங்கல்லால் கட்டப்பட்டது. நிறைய சிற்பங்களும் அழகான வெளிப்புற சுவர்களின் சிறந்த வடிவமைப்பு களும் நம்மை கவர்கின்றன. இங்கு நந்தி தேவரின் பெரிய சிலை பிரதான கதவுக்கு முன்பு உள்ளது. ஐந்து அடுக்குகள் கொண்ட உயரமான சிகரம் மற்றும் பல தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ள கோவில் இது. சிவப்பு நிற கற்களால் அமைந்துள்ள சுவர்களில் பெரும்பாலும் சிவபெருமானின் புராணங்களும், பெருமாளின் பத்து அவதாரங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

தனித்துவமான மராட்டிய பாணி கட்டிடக்கலையுடன் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இக்கோவிலை தரிசிக்க ஆன்மீக பலம் பெறலாம். குஷ்மேஸ்வர் என அழைக்கப்படும் கிரிஷ்னேஸ்வர் கருவறையில் கிழக்கு நோக்கி சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.

அவுரங்காபாத் குகை...
அவுரங்காபாத் குகை...

இக்கோவில் 13 ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாகவும் முகலாயப் பேரரசு எல்லோரா பகுதியை கையகப்படுத்திய போது இப்பகுதியும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சத்ரபதி சிவாஜியின் தாத்தா மாலோஜி போசலி மீண்டும் கட்டியதுடன் சனிசிங்கனாபூரில் ஒரு செயற்கை ஏரியையும் கட்டியதாக குறிப்புகள் கூறுகிறது.

சிவபுராணம், ராமாயணம் மற்றும் பத்ம புராணத்தில் இக்கோவிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

12 ஜோதிர் லிங்கங்களில் இதுவே மிகச்சிறிய ஜோதிர்லிங்க ஆலயமாகும். இங்கு மகா சிவராத்திரி மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு கர்ப்பகிரகத்தில் உள்ள சிவபெருமானை நாமே அபிஷேகம் செய்யலாம். நாங்கள் விபூதி, குங்குமம், வில்வம், சந்தனம் என எடுத்துச் சென்றிருந்தோம். அங்குள்ள நீரைப் பிடித்து ஈசனின் மனம் குளிர அபிஷேகம் செய்து டிரை ஃப்ரூட்ஸ் (உலர் பழங்கள்) நிவேதனம் செய்தோம். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கோவில் வளாகத்திலேயே விநாயகர், விஷ்ணு, துர்க்கை என தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் ஆரத்தி மிகவும் விசேஷம். முதல் ஆரத்தி "மங்கள ஆரத்தி". அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆரத்தி "ஜல்ஹாரி சங்கன்" காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. மாலை ஆரத்தி "சந்தியா ஆரத்தி" என இரவு ஏழரை மணிக்கும், "ஷயன் ஆரத்தி" எனப்படும் கடைசி ஆரத்தி இரவு பத்து மணிக்கும் நடைபெறும். விசேஷ நாட்களில் நேரங்கள் சிறிது மாறுபடலாம்.

இதையும் படியுங்கள்:
துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு!
கிரிஷ்னேஷ்வர் கோவில் ...

கோவில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பொதுவாக குளிர் கால மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம். கோடையில் அதிக வெப்பமும், மழைக் காலங்களில் மழையிலிருந்தும் தப்பிக்க இந்த நேரத்தை தேர்ந்தெடுத்து செல்வது நல்லது. அமைதியான சூழலில் அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

அருகில் பார்க்க வேண்டிய இடங்கள் எல்லோரா குகைகள், அஜந்தா குகைகள், அவுரங்காபாத் குகைகள் என உள்ளது.

குறிப்பு:

கோயிலுக்குள் கேமரா, செல்போன்கள் அனுமதிக்கப் படுவதில்லை. எனவே இந்த அழகான கோவிலை புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஆனால் ஆசை தீர அருகிலுள்ள எல்லோரா குகைக்கோவிலை புகைப்படம் எடுத்தோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com