த்ரிவக்ராவின் சந்தனக் குழம்பு!

Trivakravin Santhana Kuzhampu
Trivakravin Santhana Kuzhampu

கவானின் மேல் ஆத்மார்த்த பக்தி இருந்தால், எதுவும் கைகூடும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. அதற்கு உதாரணமாக புராணத்தில் ஒரு கதையைப் பார்ப்போம்.

மதுராபுரியை தலைநகராகக் கொண்டு,  விருஷ்ணி ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த கம்சன், ஒரு சமயம் தனுர் யாகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தில் கலந்துகொள்ள ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் அழைப்பு விடுத்தான். மாமாவான கம்சனின் அழைப்பை ஏற்ற ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ பலராமருடன் மதுராவை வந்தடைந்தார். மதுராவின் வீதிகளில் அவர் நடந்து வரும் பொழுது, திடீரென்று சுகந்த மணம் ஒன்று அவர் நாசியை எட்டியது. சுற்றும் முற்றும் பார்த்தார். எதுவும் புரியவில்லை.

"இப்படி ஒரு சுகந்த மணம் எங்கிருந்து வருகிறது?" என்று அருகில் இருப்பவரைக் கேட்டார். அவர்கள், "ஒன்றும் இல்லை. இது குப்ஜா எடுத்துப்போகும் சந்தனக் குழம்பின் நறுமணம்" என்றார்கள்.

அப்பொழுது அந்த வீதியில் மிகவும் அழகு வாய்ந்த பெண் ஒருவள் கூன் முதுகுடன் நடந்து வருவதை கிருஷ்ணன் கண்டார். அவளுடைய கையில் ஒரு பெரிய கிண்ணம் இருந்தது. அதில் அவள் சந்தனக் குழம்பை நிரப்பி இருந்தாள்.

 "பெண்ணே, கையில் என்ன எடுத்துச் செல்கிறாய்? இத்தனை நறுமணமாக இருக்கிறதே. நீ யார்?" என்றார்.

"என் பெயர் குப்ஜா என்பது. எனக்கு உடலில் மூன்று கோணல்கள் இருப்பதால், ‘த்ரிவக்ரா’ என்று என்னை அழைப்பார்கள். நான், அரசனின் மாளிகையில் பணிப்பெண்ணாக இருக்கிறேன். அவருக்கு தினமும் மிகுந்த உயர்வான சந்தனக் கட்டைகளைக் கொண்டு சந்தன குழம்பை அரைத்து, பல வாசனை திரவியங்களைச் சேர்த்து எடுத்துச் செல்வேன். அவர் வாசனையுள்ள இந்த சந்தனக் குழம்பை மிகவும் விரும்பி பூசிக்கொள்வார்" என்றாள்.

இவ்வாறு கூறியபடி மெதுவாக தலையை நிமிர்த்தி ஸ்ரீ கிருஷ்ண பகவானையும், ஸ்ரீ பலராமனையும் பார்த்தாள். பகவானின் அழகில் தனது மனதைப் பறிகொடுத்தாள். அதோடு, "மதுராபுரி அரசன் இந்த சந்தனத்தை தரித்துக்கொள்வதை விட,  புவனசுந்தரனான உங்களுக்குத்தான் இந்த சந்தனம் பூச வேண்டும். இந்த சந்தனத்தை பூசிக்கொள்ளும் தகுதி உங்களுக்குத்தான் இருக்கிறது"  என்று கூறினாள்.

"அப்படியானால் இந்த சந்தனத்தை நீயே உனது கையால் எங்களுக்குப் பூசி விடேன்" என்று கிருஷ்ணன் கூற, மிகவும் சந்தோஷம் அடைந்த குப்ஜா, தனது கைகளால் சந்தனக் குழம்பை அள்ளி எடுத்து ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், ஸ்ரீ பலராமனுக்கும் ஆசை தீர பூசி விட்டாள்.

அப்பொழுது பகவான், த்ரிவக்ராவின் கால்களின் மேல்,  தன் கட்டை விரலை வைத்து அழுத்திய வண்ணம், அவள் முகவாய்க் கட்டையை தனது வலக்கை இரண்டு விரல்களால் நிமிர்த்தினார். கோணலாக இருந்து கூன் விழுந்த அவளது தேகம் சற்றென்று நிமிர்ந்தது. மூவுலகும் போற்றும்படியான பேரழகியாக அவள் திகழ்ந்தாள்.

"ஐயனே, இனிமேல் என்னை யாரும் ‘த்ரிவக்ரா’ என்று கூற மாட்டார்கள். எனது இந்த ஊனத்தை நீங்கள் சரி செய்து விட்டீர்கள். என் இல்லத்திற்கு நீங்கள் அவசியம் வர வேண்டும்" என்று குப்ஜா அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்து பணிந்து கேட்டுக் கொண்டாள்.

"பெண்ணே, அவசியம் உன் இல்லத்திற்கு வருவேன். ஆனால், இப்பொழுது அல்ல. எனக்கு இந்த மதுராவில் சில கடமைகள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவற்றை முடித்துவிட்ட பின் உன் இல்லத்திற்கு நிச்சயமாக வருகை தருவேன்" என்று கூறி அகன்றார்.

பீதாம்பரதாரியை கண்ட நாள் முதலே அவனின் சிந்தனையாகவே இருந்து வந்த  குப்ஜா, தனது இல்லத்தில் கண்ணா, கண்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா, மாதவா, மதுசூதனா என்று புலம்பியபடி தனது காலத்தை கழித்து வந்தாள்.

சில காலம் கழிந்தது. கம்சனை வதம் செய்த பிறகு கிருஷ்ணன் ஒரு நாள்,  குப்ஜாவின் இல்லத்திற்கு ஏகினார். தாளிடப்பட்டிருந்த வாயிற் கதவை தட்டினார்.

"யாரது? யாராக இருந்தாலும் நான் கதவைத் திறக்க மாட்டேன். என்னுடைய மனம் என்னிடம் இல்லை" என்கிற பதில் வந்தது.

"ஓ... அப்படியா? கிருஷ்ணனான எனக்கும் இதே பதில்தானா? சொல் குப்ஜா. நான் வந்த வழியே திரும்பிப் போகிறேன்" என்றார்.

அதைக் கேட்டதும், "கிருஷ்ணா, ஹ்ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா நீங்களா வந்திருக்கிறீர்கள்? இதோ வந்துவிட்டேன். போய் விடாதீர்கள் பகவானே, இதோ வருகிறேன்" என்று கூறியபடியே வாயில் கதவை திறந்தாள்.

"பெண்ணே, சந்தனம் எங்கே? அந்த சந்தனத்தைப் பூசிக்கொள்ளத்தானே ஆர்வமாக ஓடி வந்தேன். சந்தனத்தை சீக்கிரமாகக் கொடு" என்று கூறினார்.

குப்ஜா அவசர அவசரமாக சந்தனத்தைத் தேய்த்து, வாசனை திரவியங்களைச் சேர்த்து,  தயார் நிலையில் எடுத்துக்கொண்டு, வாயிலை நோக்கி ஓடினாள்.

"உன் கையாலேயே பூசி விடு. இந்த சந்தனத்தை பூசிக்கொண்ட பின்தான் உன் இல்லத்திற்கு உள்ளேயே நுழைவேன்" என்றார்.

இரு கைகளாலும் சந்தனத்தை எடுத்தவள், பகவான் திருமேனி முழுவதும் ஆசை தீர பூசி விட்டாள். பகவான் அவளை அணைத்து தனது மார்புடன் சேர்த்துக் கொண்டார். மிகவும் பரவச நிலையை அடைந்தாள் குப்ஜா. அவள் மட்டுமல்ல, அனைத்து கோபியர்களுமே அந்தத் தருணத்தில் பரவச நிலையை அடைந்தார்கள் என்று அறியப்படுகிறது. குப்ஜாவின் தாபம் நீங்கியது.

சரி, இந்த குப்ஜா என்பவள் யார்? முற்பிறவியில் அவள் யாராக இருந்தாள்? அதையும் தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள்:
மனித மனங்களை வெல்லும் சூட்சுமம் தெரியுமா?
Trivakravin Santhana Kuzhampu

திரேதா யுகத்தில், தண்டகாரண்யத்தில், ஸ்ரீ ராமபிரானை அடைவதற்காக ஸ்ரீ சீதா மாதாவை வதம் செய்யும் பொருட்டு கிளம்பிய சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்தார் அல்லவா? மூக்கறுபட்ட அந்த சூர்ப்பனகை, எப்படியும் ஸ்ரீராமபிரானை அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில்,  சிவபெருமானைக் குறித்து ஆயிரம் வருடங்கள் தவம் இருந்தாள். அப்பொழுது மகேசன் அவள் முன் தோன்றி, ‘யாது வேண்டும்?’ என்று வினவியபொழுது, ‘ஸ்ரீ ராமபிரானை நான் அடைய வேண்டும்’ என்று அவள் கூறினாள். அதற்கு முக்கண்ணனார், ‘ஸ்ரீராமன் என்பவர் ஏக பத்தினி விரதன். அவரை நீ அடைய முடியாது. ஆனால், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனாக அவதாரம் செய்யப்போகிறார். அப்போது உனது விருப்பமானது மதுரா நகரில் நிறைவேறும்’ என்று ஆசி கூறினார்.

குப்ஜாவாக பிறப்பெடுத்த சூர்ப்பனகையின் ஆசை நிறைவேறியது. இது எதைக் குறிக்கிறது? பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலந்துவிட்ட உன்னத நிலைதான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com