இரண்டு ஆடி அமாவாசை...

இரண்டு ஆடி அமாவாசை...
Published on

இதில் எந்த அமாவாசையில் திதி... தர்ப்பணம்....??

டப்பு ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஆனதும், சந்திரன், பூமி ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே பாகையில் அதாவது ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் அமைந்திருக்கும் நாள் தான் ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று தான் நமது முன்னோர்கள் பிதுர் லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதிகம்.

ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு, சுகமாக வாழ துணை புரிவது தெய்வாம்சம் பொருந்திய நமது முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயராகும். இறை விருப்பப்படி மானிடர்க்கு ஆசிகள் கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழி காட்டும் அதிகாரம் கொண்டவர்கள் தேவர்களும் பித்ருக்களுமே.  

அமாவாசை தினத்தன்று பிதுர்க் கடன் செய்வதால் நமக்கு நம்முடைய மூதாதையர்கள், ரிஷிகள், தேவர்கள் ஆகியோர் ஆசிகள் கிடைப்பதாக நம்பிக்கை. ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்தது தான். ஆடி மாதப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, கருட பஞ்சமி, ஆடிக் கிருத்திகை, ஆடித் தபசு என ஆடி மாதம் முழுவதுமே விஷேசமான நாட்கள் தான். அதிலும் ஆடி அமாவாசை நாள் ஆனது, மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். அன்றைக்கு நமது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் தருவது வழக்கம் ஆகும்.

இந்த ஆண்டு 2௦23 ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இது போன்று ஒரு மாதத்தில் இரண்டு நாளில் அமாவாசை வருகின்ற மாதத்தினை மலமாதம் என்பதாகப் பஞ்சாங்கக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது போலவே ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி வந்தால் அதனையும் சிறப்பு வாய்ந்த மாதமாகவே கூறுகின்றனர்.

ஒரு ஆண்டில் மாதா மாதம் வருகின்ற அமாவாசையில் மூன்று அமாவாசை நம்மால் மிகவும் முக்கியமானதாகக் கடைபிடிக்கப்படுகிறது. உத்தராயண காலத்தில் வருகின்ற தை அமாவாசை. மகாளய பட்சத்தில் வருகின்ற புரட்டாசி அமாவாசை, தட்சிணாயன காலத்தில் வருகின்ற ஆடி அமாவாசை. தனது முன்னோர்களுக்கு அவரவர் இறந்த திதியன்று திதி தர்ப்பணம் தர இயலாமல் போனவர்கள், அல்லது திதி எதுவெனத் தெரியாமல் இருப்பவர்களும் மேற்கண்ட மூன்று அமாவாசைகளில் ஏதேனும் ஒரு அமாவாசையில் தனது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் தரலாம்.

2௦23 ஆடி மாதம் 1ஆம் நாள் ஜூலை 17 திங்கட்கிழமை தொடங்கி, ஆடி மாதம் 32ஆம் நாள் ஆகஸ்ட் 17 வியாழன் அன்று ஆடி மாதம் முடிவடைகிறது. இதில் ஆடி 1 ஜூலை 17 திங்கட்கிழமை அன்றும், ஆடி 31 ஆகஸ்ட் 16 புதன்கிழமை அன்றும் ஆடி அமாவாசை வருகிறது. இந்த இரண்டு அமாவாசைகளில் எந்த அமாவாசை அன்று நமது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் தருவது? இது போன்ற மாதங்களில் முதலில் வரும் அமாவாசையினைக் காட்டிலும், இரண்டாவதாக வருகின்ற அமாவாசை நாளில் தான் நமது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் தர வேண்டும் என்று ஆன்மீகப் பெரியோர்களும் ஜோதிட வல்லுனர்களும் கூறுகின்றனர்.

முனைவர் பாலசந்தர்
முனைவர் பாலசந்தர்

அதனால், வருகின்ற ஆடி 31 ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை தினத்தில் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில், ஆற்றங்கரைகளில் திதி தர்ப்பணம் தர வேண்டும்.” எனக் கூறுகிறார் திருச்சி, மண்ணச்சநல்லூர் ஜோதிட ரத்னாகரம் முனைவர் பாலசந்தர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com