ஒரே கருவறையில் இரண்டு திருமால்கள்!

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள்
ஸ்ரீவேங்கடேசப் பெருமாள்

செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே அமைந்துள்ள பெரும்பேடு கிராமத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்ற திருநாமத்தோடு பல நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வருகிறார். மிகவும் பழைமையான இத்தலம், இடையில் பராமரிப்பின்றி சிதைந்து, பின்னர் ஊர் மக்கள் மற்றும் பக்தர்களின் பெருமுயற்சியால் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆதிபஞ்சாயுதபாணி என்ற இரண்டு ரூபத்தில் எழுந்தருளி காட்சி தருவது சிறப்பு. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 19 செப்டம்பர் 2022 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.

முற்காலத்தில் இப்பகுதியில் அமணாசுரன் மற்றும் அமண அரக்கி என்ற இரு அரக்க சகோதர, சகோதரியர் மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தி வந்தார்கள். இதனால் பல துன்பங்களை அனுபவித்த இப்பகுதி மக்கள், எம்பெருமானை வேண்டி தங்களைக் காத்தருளுமாறு வேண்டினர். பக்தர்களைக் காக்க முடிவு செய்த ஸ்ரீமன் நாராயணன் பஞ்சாயுதபாணியாக வடிவெடுத்து வந்து அரக்கனையும் அரக்கியையும் வதம் செய்து இப்பகுதி மக்களைக் காத்தருளினார். அதோடு, பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி, இத்தலத்திலேயே ஸ்ரீ ஆதிபஞ்சாயுதபாணியாக அருளத் தொடங்கினார்.

ஸ்ரீஆதிபஞ்சாயுதபாணி
ஸ்ரீஆதிபஞ்சாயுதபாணி

சங்கு எனும் பாஞ்சஜன்யம், சக்கரம் எனும் சுதர்சனம், கதை எனும் கௌமோதகி, வில் எனும் சார்ங்கம் மற்றும் வாள் எனும் நந்தகம் முதலான பஞ்சாயுதங்கள், அதாவது ஐந்து ஆயுதங்கள் எப்போதும் பெருமாளுடனே இருப்பதாக ஐதீகம். திருமாலின் ஆயிரம் திருநாமங்களில், ‘பஞ்சாயுதபாணி’ என்பதும் ஒன்றாகும். இத்தலத்தில் பஞ்சாயுதங்கள் பெருமாளை வலம் வருவதாக ஐதீகம். பெருமாளின் திருக்கரத்தில் காணப்படும் சக்கரம் இத்தலத்தில் சற்றே வித்தியாசமாக பிரயோக நிலையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

உத்ஸவர் பெருமாள்
உத்ஸவர் பெருமாள்

னி, கோயிலுக்குள் செல்வோம். இத்தலம் கொடிமரம், முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மற்றும் கருவறை விமானம் என்ற அமைப்போடு அழகாகத் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் தலத்தின் கொடிமரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருவது சிறப்பு. சுற்றுப்பிராகாரத்தில் ஆஞ்சனேய ஸ்வாமி பக்த ஆஞ்சனேயராக வடக்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். கருடாழ்வார் சன்னிதியின்றி மூலவர் ஸ்ரீஆதிபஞ்சாயுதபாணியை நோக்கியவண்ணம் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் உத்ஸவர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையில் திருமால் சதுர்புஜராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் விளங்க, கீழிரு கரங்களில் வலது திருக்கரம் அபய நிலையிலும், இடது திருக்கரத்தினை தொடை மீது வைத்தும் காட்சி தருகிறார். ஸ்ரீவேங்கடேசப் பெருமாள், ஸ்ரீஆதிபஞ்சாயுதபாணி என இரு மூலவர்கள் ஒரே கருவறையில் அமைந்து அருளும் அதிசயத் திருக்கோயில் இது. இத்தலத்தில் தல விருட்சம் மற்றும் தீர்த்தத் திருக்குளம் என ஏதும் இல்லை.

ஆலய முன் தோற்றம்
ஆலய முன் தோற்றம்

ஸ்ரீவேங்கடேசப் பெருமாளை வணங்கினால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பதும், ஸ்ரீபஞ்சாயுதபாணி பெருமாளை வணங்கினால் மனதிலுள்ள பயம் அனைத்தும் அகலும் என்பதும் ஐதீகம். வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி அன்று ஊஞ்சல் உத்ஸவம், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு முதலான வைணவ சம்பிரதாய விழாக்கள் அனைத்தும் இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்: செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக கிளாப்பாக்கம் செல்லும் T27 அரசுப் பேருந்தில் பயணித்து பெரும்பேட்டை அடையலாம். திருக்கழுக்குன்றம் மார்க்கெட் நிறுத்தத்திலிருந்து பெரும்பேட்டிற்கு ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6 முதல் 8 மணி வரை. தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இக்கோயிலின் சேவைகளைச் செய்யும் அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பெருமாளை தரிசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com