உலகளாவிய சூரிய வழிபாடு!

உலகளாவிய சூரிய வழிபாடு!
Published on

லக உயிர்கள் வாழ அவசியத் தேவை சூரியக் கதிர்கள். அதை அறிந்தே நமது முன்னோர்கள் காலையில் கண் விழித்து எழுந்ததும் சூரிய வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நவக்கிரக நாயகர்களில் முதன்மையானவராக வணங்கப்படும் தெய்வம் சூரிய பகவான் ஆவார். உலக இயக்கங்கள் அனைத்துக்கும் இவரே மூலகாரணமாகத் திகழ்கிறார்.

அதனால்தான் நமது இந்து மதத்தில் சூரிய பகவானைப் பெருமைப்படுத்தும் விதமாக, பன்னிரு தமிழ் மாதங்களிலும் பன்னிரு பெயர்களில் அழைத்து சூரிய வழிபாடு மேற்கொண்டனர். தை மாதத்தில் பூஷாவான், மாசியில் பகன், பங்குனியில் துவஷ்டா, சித்திரையில் விஷ்ணு, வைகாசியில் ஆர்யமான், ஆனியில் விஸ்வாஸ், ஆடியில் அம்சுமான், ஆவணியில் பர்ஜன், புரட்டாசியில் வருணன், ஐப்பசியில் இந்திரன், கார்த்திகையில் தாதா, மார்கழியில் மித்ரன் என்று சூரியனை அழைத்து வழிபட்டுள்ளதைக் காண்கிறோம். சூரியன் வலம் வரும் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், அதில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன்தான் காலத்தின் கடவுள் என்றும் வேதம் கூறுகிறது.

சூரிய வழிபாடு என்பது நமது இந்தியாவில் மட்டுமே என்று நீங்கள் நினைத்திருப்பீர்களேயானால், அது தவறு. உலகின் பல்வேறு நாடுகளிலும் சூரிய வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் நமது இந்தியாவை விட, அதிதீவிரமாக சூரிய வழிபாட்டை கடைபிடிக்கும் நாடுகளும் சில உண்டு. அந்த வகையில் எகிப்து நாட்டில் முதன்மை தெய்வமாகக் கருதப்படுபவர் சூரிய பகவான்தான். இந்த நாட்டு மக்கள் சூரியனை, 'அமான்'என்றும், 'கிராஸ்'என்றும் அழைத்து வழிபடுகின்றனர்.

தென் அமெரிக்கா, பெரு நாட்டின் புராதன மக்களான, 'இன்கா' என்னும் வகுப்பினர் தங்கள் மூதாதையர்கள் சூரியனின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறிப் பெருமிதப்படுகின்றனர். அதேபோல், மத்திய அமெரிக்காவில் வாழும் மாயன் இன மக்களின் முதன்மைக் கடவுள் சூரியன் ஆவார். இம்மக்கள் சூரியனை, 'கினீஸ் அஹெள’ என்று குறிப்பிடுகின்றனர்.

கிரேக்க புராணத்தில் சூரியனுக்கு, ‘ஹீலியோஸ்’ என்றும், ‘அப்பல்லோ’ என்றும் பெயர்கள் உண்டு. பாரசீகர்களின் மதமான பார்ஸி மதத்தின் புனித வேதமான 'அவெஸ்தா' என்னும் நூலில் சூரிய வழிபாடு குறித்து ஏராளமான பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com