
ராவணவதம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் வெற்றி வீரராக பாரதத்திற்குத் திரும்பிய ராமர், வானர வீரர்கள் புடைசூழக் கந்தமாதனம் வந்து சேர்ந்தார். அங்கே சந்தித்த அகஸ்தியரின் அறிவுரைப்படி அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய முன்வந்தார். ஆகவே, அனுமனை, கயிலாயம் சென்று ஒரு லிங்கம் கொண்டு வருமாறு பணித்தார்.
அனுமன் வர காலதாமதமானதால், சீதை, தன் கரங்களால் மணலை அள்ளி அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்துத் தந்தாள். அதை ராமர் பிரதிஷ்டை செய்தார். தாமதமாக வந்த அனுமன் வருத்தமுற்றான். தான் கொண்டு வந்த லிங்கத்தைத்தான் ராமர் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று விரும்பிக் கேட்டான்.
ராமரோ, ‘‘சீதை உருவாக்கிய லிங்கத்தைப் பெயர்த்துவிடு, உன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வோம்!’’ என்று சொன்னார்.
அந்த சிவலிங்கதின் மீது தன் வாலைச் சுற்றிப் பிடித்து, முழு பலத்தையும் பிரயோகித்து இழுத்தான் அனுமன். ஆனால் மணலால் ஆன ராமநாதலிங்கம் கொஞ்சம்கூட அசையவேயில்லை. இழுத்த வேகத்தில் அனுமன்தான் தள்ளிப் போய் விழுந்தான். ஆனால் அவனையும் சமாதானப்படுத்தும் வகையில், அவனுக்கும் பல அரக்கர்களைக் கொன்ற தோஷம் போகவேண்டும் என்பதால், தான் ஸ்தாபித்த லிங்கத்துக்கு அருகிலேயே அவனுடைய லிங்கத்தையும் அமைக்கச் சொன்னார் ராமர் .
ராமன், ஈஸ்வரனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், அத்தலம் ‘ராமேஸ்வரம்’ என்று பெருமை பெற்றது. இந்த ராமலிங்கம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். ஆலயம் கடலுக்கு அருகே அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய பிரதான கோபுரம், நூற்று இருபத்தைந்தடி உயரத்தில், ஒன்பது அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. மூன்று பிராகாரங்கள். மூன்றாவது பிராகாரத்தில், ஐந்தடி உயர மேடை மீது நாலாயிரம் தூண்கள் நூல் கட்டியது போன்ற ஒழுங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிக நீண்ட பிராகாரம் என்று கருதப்படும் இங்கே, ஒவ்வொரு தூணும் பதினோரு அடி உயரம் கொண்டது. இரண்டாவது பிராகாரத்தைக் கடந்தால், பதினெட்டடி உயரம், இருபத்திரண்டு அடி நீளம் கொண்ட நந்தியின் சுதை சிற்பத்தைக் காணலாம். கருவறையில் ராமர் ஸ்தாபித்த ராமநாத லிங்கம் பொலிகிறது.
ராமநாதருக்கு வலப்புறத்தில் அமைந்துள்ளது, அம்பாள் பர்வதவர்த்தினிக்கான தனி சன்னிதி. மூல சன்னிதிக்கு வடக்கே அனுமன் ஸ்தாபித்த அனுமத் லிங்கத்தை தரிசிக்கலாம்.
ராமநாதர் சன்னிதிக்குப் பின்புறம், இரண்டாம் பிராகாரத்திற்கும், மூன்றாம் பிராகாரததிற்கும் நடுவே மகாவிஷ்ணு, சேதுமாதவனாக எழுந்தருளியுள்ளார். சேது என்றால் பாலம். இலங்கைக்குப் பாலம் கட்டியவனாதலால், சேது மாதவன். இச்சிலை வெள்ளைப் பளிங்கால் உருவாகியுள்ளதால் ஸ்வேத மாதவன் என்றும் அழைக்கலாம். வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெள்ளை என்று பொருள்.
ராமேஸ்வரத்தில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் தனுஷ்கோடி தீர்த்தம் குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் கோவிலில் இருந்து 17 கி.மீ. தொலைவில், அமைந்திருக்கிறது, தனுஷ்கோடி. இந்தப் பெயர் எப்படி வந்தது?
பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ராமர் கட்டிய பாலத்தைப் பகைவர்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று பயந்தான், விபீஷணன். அந்தப் பாலத்தை உடைத்து விடுமாறு ராமரிடம் கோரினான். ராமர் தன் வில்லின் முனையால், அவ்வாறே அந்த பாலத்தை இலங்கையிலிருந்து துண்டித்தார். தனுஷ் என்றால் வில், கோடி என்றால் முனை என்பதால் அந்த இடம் தனுஷ்கோடி.
ராமநாத லிங்கத்தில், ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றிய மூன்று தழும்புகளை இன்றும் காணலாம். ராமலிங்கத்தை அகற்ற முயன்று தள்ளிப்போய் அனுமன் விழுந்த இடத்தை ஹனுமத் குண்டம் என்கிறார்கள். இங்கே நீராடினால், வடக்கே திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.
ராமேஸ்வரத்தில் மொத்தம் முப்பத்தாறு புண்ணிய தீர்த்தங்கள். அவற்றில் இருபத்திரண்டு, கோயிலின் உள்ளே அமைந்துள்ளன.
ஆலயத்திற்கு மேற்கே, கந்தமாதன பர்வதத்தில் பதிந்துள்ள ஸ்ரீராமரின் பாதங்களுக்குத் தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட திதி, கிழமை, நட்சத்திர நாட்களில்தான் கடலில் நீராட வேண்டும் என்று சாஸ்திர விதிமுறைகள் உண்டு. ஆனால் ராமேஸ்வரத்தில் நீராட இந்தக் கட்டுப்பாடுகள் கிடையாது.
ராமநாதபுரத்திலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து அருள்பாலிக்கும் ராமநாதஸ்வாமியை தரிசிப்போம். பாவங்களைக் கரைப்போம். புண்ணியங்களைக் குவிப்போம்.