

அனைத்து வித வியாதிகளையும் தீர்க்கவல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் ஸ்ரீ பாலாம்பிகை என்பதாகும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இடது புறம் கணபதியும், வலதுபுறம் துர்கை திருமேனிகளும் காணப்படுகின்றன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளன. அதைத் தொடர்ந்து கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி கிழக்கு திசை நோக்கி லிங்கத் திருமேனியராய் அருள்பாலிக்கிறார்.
இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி அமைந்துள்ளது. பிராகாரத்தின் மேற்கே பிள்ளையார் மற்றும் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். வடக்கு பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வ மரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான
சிவலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. கோயிலில் சனி பகவான் தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார். சண்டீஸ்வரர் சன்னிதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிராகாரத்தில் சூரியன், பைரவர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். சூரிய புஸ்கரணி தீர்த்தம் ஆலயத்தின் எதிர் திசையில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு முந்தைய ஆலயமாகக் கருதப்படுகிறது. சனி பகவானுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளதால், நவக்கிரகங்கள் ஆலயத்தில் இல்லை. ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும், கிரகப் பெயர்ச்சி நாட்களிலும் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சனி பார்வையால் துன்பப்படுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். இந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் பல்வேறு சிவ விசேஷ நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளில் இருந்து நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள், இந்த பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். சகல விதமான சரும நோய்களையும் தீர்க்க வல்லவர், இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் ஆலயத்தின் எதிரே உள்ள சூரிய புஸ்கரணி தீர்த்தத்தில் நீராடி, நீலோத்பல மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.
நள மகாராஜன், கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டான். இதனால் அந்த மன்னனின் உருவம் மாறியது. மன்னன் செய்வது அறியாமல் தவித்தான். அப்போது ஒரு முனிவரின் வழிகாட்டுதல்படி இந்த ஆலயத்துக்கு வந்து இக்கோயில் இறைவனையும், இறைவியையும் ஆராதித்தான். மன்னனின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், நள மகாராஜனுக்கு அவனது பழைய உருவத்தைத் திரும்ப வழங்கியதாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.
அமைவிடம்: மயிலாடுதுறை - காளி பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here