அல்லல் களைந்து அருள் வழி காட்டும் விக்னேஸ்வரரின் திருத்தலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் திருக்கோவில் நாம் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று !
புராதனமான இத்திருக்கோவிலின் பிராதன மூர்த்தியே விநாயகர் தான்! கம்பீரமான வெண்ணிற வானுயர்ந்த கோபுரத்தைப் பார்த்ததுமே நம்மால் திவ்ய சாநித்யத்தை உணர முடியும் !
இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் என்ன தெரியுமா ?
ஒரு உத்தரணி திவ்ய தீர்த்தம் தான் !
ஒரு ஸ்பூன் தண்ணீரா ?
சகல சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் திருக்கோவில் தல வரலாறை அறிந்தால், திவ்ய பிரசாத மகிமை புரியும் !
சுயம்பு மூர்த்தியான வரசித்தி விநாயகர் இத்திருத்தலத்தில் எழுந்தருளிய வரலாறு நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
முன்னொரு காலத்தில் மூன்று சகோதரர்கள் விஹாரபுரி என்ற ஊரில் வசித்து வந்தனர். அவர்கள் மூவருமே மாற்றுத்திறனாளிகள். ஒருவருக்குப் பேச முடியாது, இன்னொருவருக்கு காது கேட்காது, மற்றவரோ பார்வைக் குறைபாடு உள்ளவர். மூவரும் கடின உழைப்பாளிகள் !
தங்களுடைய ‘காணி’ நிலத்தில் அரும்பாடு பட்டு பயிர் செய்து வந்தனர். ஒருமுறை, நிலத்துக்கு நீர் பாய்ச்ச, கிணற்றில் இருந்து நீர் நிறைக்க நினைத்தனர். ஆனால், கிணற்றில் நீரே இல்லை. மூவரில் ஒருவர், மண்வெட்டி, கடைப்பாறையுடன் கிணற்றில் இறங்கி, அதை ஆழப்படுத்தும் வேலையைத் தொடங்கினார்.
மண்வெட்டி ஏதோ ஒரு கடினமான பாறையில் பட்டுத் தெறித்தது. செந்நிறக் குருதியும் அந்த இடத்தில் பெருகியது. பேச முடியாத குறை தீடிரென நீங்கி, அந்தச் சகோதரன் குரல் கொடுக்க, காது கேட்டது மற்றொருவருக்கு ! ஓடி வந்த மூன்றாமவருக்கும் கண் தெரிந்தது ! மூவரும் ஒன்று சேர்ந்து அப்பாறையை அகற்ற முயற்சித்தனர். இயலவில்லை ! திருவுருவத்தை பார்க்க, அருகில் இருந்த கிராம மக்களையும் துணைக்கு அழைத்தனர்.
மூவரின் குறைகளும் தீடிரென நீங்கிய அதிசயத்தைக் கண்ட கிராமத்தார், விரைந்து வந்து கிணற்றில் இருந்த விநாயக மூர்த்தியைக் கண்டு வியந்தனர். கிணற்றை விட்டு 'ஸ்வாமி வாரி' மூர்த்தியை வெளியே எடுக்க முடியவில்லை. ஊறும் தண்ணீரில் சுயம்புவாகக் காட்சியளித்த 'விநாயக ஸ்வாமி'க்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். இளநீர் பெருகி காணி நிலத்தை சதும்ப நீர் பாய்ச்சிய நிலம் போல ஆக்கியது !
காணி நிலத்தில் தோன்றியதாலும், பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், காணிநிலம் அளவு பரவியதாலும் 'காணிப்பாக்கம்’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்ததாகவும், விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இன்றளவும், சுயம்புமூர்த்தி கிணற்று நீருக்குள் தான் தரிசனம் தருகிறார். அதிக அலங்காரங்கள் இன்றி, மண்வெட்டி பட்ட காயம் தலையில் தெரிய , அன்று கண்ட பாறை மேனியாய் !
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சிலை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருகிறதாம்! பல வருடங்களுக்கு முன்னால் பெஜவாடா சித்தையா என்ற பக்தர் விநாயகருக்கு ஒரு வெள்ளிக்கவசத்தை வழங்கினார். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் அதிசய விநாயகர் அல்லவா? அந்தக் கவசம் சிறியதாகி, திருவுருவத்துக்கு அணிவிக்க இயலாமல் போய்விட்டது.
ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்தில் உள்ளது காணிப்பாக்கம்! சென்னையில் இருந்து 175 கி.மீ தொலைவிலும், திருப்பதியில் இருந்து அறுபத்தைந்து கி.மீ தொலைவிலும் உள்ளது. திருமலா- திருப்பதி, காளஹஸ்தி மற்றும் பெங்களுரில் இருந்தும் வரலாம்.
திரளான பக்தர் கூட்டம் எல்லா நாட்களும் ! பிரார்த்தனை மற்றும் பரிகாரத் தலம் ! கல்யாணம் கைகூட, குழந்தைப் பேறு பெற, துலாபாரம், அன்னப்ராசனம், நாக தோஷ நிவர்த்தி என எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அற்புதக் கடவுள் !
ஆனால், அவர் சன்னதியில் சத்தியத்துக்கு மட்டுமே இடம் உண்டு ! இந்தக் கோவிலின் 'சத்தியப் பிரமாணம்' நிகழ்வு மிகப் பிரசித்தம். காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சன்னதியில் நின்று, சொல்லுவதை சத்தியப் பிரமாணமாக ஏற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இன்றும் உள்ளது. அவர் முன்னே பொய் சொன்னால்… தொண்ணூறு நாளில் தண்டனை நிச்சயம்! ஆதலால், பயபக்தியுடன் தான் பக்தர்கள் அவரை வணங்குவர். நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் !
அண்மையில் புனருத்தாரணம் செய்யப்பட்டு அழகுடன் மிளிர்கிறது. சிறப்பு சேவைகள் இணையவழி சேவைகளும் உண்டு. பெரிய வளாகத்துடன் அமைந்துள்ள கோவிலின் வெளிப்புறத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்குளமும், அருகே அமைந்துள்ள கண் கவரும் விநாயகர் பூங்காவும், பெருமாள் கோவிலும், மணிகண்டேஸ்வரர் கோவிலும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் !
”உன்னை மறந்ததுண்டோ சொர்ண மணிப்பிள்ளாய் !
கன்னமதம் வழியும் கரிமுகனே ! கண் பாராய் ! ”